புதுடெல்லி:முன்னாள் பிரதமர் மறைந்த மன்மோகன் சிங்குக்கு நினைவிடம் அமைப்பதற்காக மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்புறத்துறை அமைச்சக அதிகாரிகள் சில இடங்களை தேர்வு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்புறத்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் புதுடெல்லியில் உள்ள விஜய் காட், ராஷ்டிரிய ஸ்மிரிதி சதல் மற்றும் அதன் அருகில் உள்ள பகுதிகளுக்கு நேற்று சென்றனர். மன்மோகன் சிங் நினைவிடம் அமைப்பதற்கான இடங்கள் குறித்து அவர்கள் ஆய்வு செய்தனர். மேலும் மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்புறத்துறை அமைச்சக அதிகாரிகள்-மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் இடையே இது தொடர்பாக ஒரு ஆலோசனை கூட்டமும் நடத்தப்பட்டுள்ளது.
இது தவிர மத்திய பொதுப்பணித்துறையை சேர்ந்த அதிகாரிகளும் மன்மோகன் சிங் நினைவிடம் அமைப்பதற்காக சஞ்சய் காந்தி நினைவிடம், ராஷ்டிரிய ஸ்மிரிதி சதல் ஆகிய பகுதிகளில் ஆய்வு செய்திருக்கின்றனர். எனினும் இதில் இறுதி முடிவு ஏதும் எடுக்கப்படவில்லை. சில இடங்கள் ஆய்வு செய்யப்பட்டிருப்பது குறித்து மன்மோகன் சிங் குடும்பத்தினரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் இடம் முடிவு செய்த பின்னரே நினைவிடம் கட்டும் பணிகள் தொடங்கும்.