புதுடெல்லி:அம்பேத்கரை அவமதித்த உள்துறை அமைச்சர் அமித்ஷா தமது பதவியை ராஜினாமா செய்வது மட்டுமின்றி, மன்னிப்புக் கேட்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
அரசியலமைப்பு சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டதன் 75 ஆவது ஆண்டை முன்னிட்டு மாநிலங்களவையில் நேற்று இரண்டாவது நாளாக அரசியலமைப்பு சட்டம் குறித்த விவாதம் நடைபெற்றது. இதற்கு பதில் அளித்து பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, "அம்பேத்கர், அம்பேத்கர் என்று கூறுவது ஒரு பாணியாக மாறி விட்டது. கடவுளின் பெயரை அவர்கள்(எதிர்க்கட்சியினர்) பல முறை கூறினால், அவர்களுக்கு சொர்க்கத்திலாவது இடம் கிடைத்திருக்கும்,"என்று கூறியிருந்தார்.
இதையடுத்து இன்று நாடாளுமன்றத்தில் இது குறித்து விவாதிக்க வேண்டும் என்றும், அமித்ஷா ராஜினாமா செய்வதுடன் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. இந்த நிலையில் மாநிலங்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா அம்பேத்கரை அவமதித்ததாக கூறி இன்று நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி கட்சி எம்பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்க்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, வயநாடு எம்பி பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.