ராய்பூர்:சத்தீஸ்கர் தலைநகர் ராய்பூரில் உள்ள ஹிதாயத்துல்லாஹ் தேசிய சட்ட பல்கலைக்கழகத்தில் பெண்களுக்கு மாதவிடாய் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஹிதாயத்துல்லாஹ் தேசிய சட்ட பல்கலைக்கழகத்தின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், பெண்களுக்கான மாதவிடாய் விடுமுறை ஜூலை 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாக தெரிவித்தார்.
இது தொடர்பாக ஹிதாயத்துல்லாஹ் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் விசி விகேகானந்தன் வெளியிட்ட செய்திக் குறிப்பில், இளம் மாணவிகளின் சிறப்பு தேவைகளை புரிந்து கொண்டு அவற்றை எளிதாக்குவதன் முயற்சியாக மாதவிடாய் விடுமுறை கொள்கை அமல்படுத்தப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், இந்த மாதவிடாய் விடுமுறை கொள்கையை அமல்படுத்த ஒத்துழைப்பு வழங்கிய பல்கலைக்கழக கவுன்சிலுக்கு நன்றி தெரிவிப்பதாக அவர் கூறியுள்ளார்.
மாணவிகள் கல்லூரி நாட்களில் மாதத்திற்கு ஒரு நாள் வருகை பதிவுடன் கூடிய விடுமுறை கோரலாம் என்றும் தேர்வு நாட்களில் இத்தகைய சிறப்புத் தேவைகள் காரணமாக விதி விலக்குகள் நீட்டிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒழுங்கற்ற மாதவிடாய் நோய்க்குறிகள் அல்லது பிசிஓஎஸ் போன்ற பிரச்சினைகளால் அவதிப்படும் மாணவிகள், ஒரு செமஸ்டருக்கு ஒரு பாடத்திற்கு ஆறு வகுப்புகள் வரை வருகை பதிவுடன் கூடிய விடுமுறை பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்லூரி நாட்களில் மாதத்திற்கு ஒருமுறை வருகை பதிவுடன் கூடிய விடுமுறையை மாணவிகள் எடுக்க முடியும் என்றும் வருங்காலத்தில் தேர்வுக் காலங்களில் விடுமுறை எடுப்பது தொடர்பாக பரிசீலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க:கனிம வளங்களுக்கான ராயல்டி விவகாரம்: மாநில அரசுகளுக்கே உரிமை - உச்ச நீதிமன்றம்! - Supreme Court Minerals Royalty Case