ராஞ்சி:ஜார்கண்ட் மாநிலத்தில் நான்காவது முறையாக ஹேமந்த் சோரன் முதலமைச்சராக பதவி ஏற்றுள்ளார்.
81 தொகுதிகளைக் கொண்ட ஜார்கண்ட் மாநிலத்தில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான இந்தியா கூட்டணி 56 இடங்களை பிடித்தது. இதையடுத்து ஜேஎம்எம் சட்டசபை கட்சித் தலைவராக ஹேம்ந்த் சோரன் தேர்வு செய்யப்பட்டார்.
இதையடுத்து ஆளுநர் சந்தோஷ் குமார் கங்வாரை சந்தித்து எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்தை வழங்கினார். இதனைத் தொடர்ந்து அவரை ஜார்கண்ட் முதலமைச்சராக பதவி ஏற்க வருமாறு ஆளுநர் அழைப்பு விடுத்தார். இதையடுத்து தலைநகர் ராஞ்சியில் உள்ள மொராபாடி மைதானத்தில் இன்று மாலை நடந்த பதவி ஏற்பு விழாவில் அந்த மாநில ஆளுநர் சந்தோஷ் குமார் கங்வார், முதலமைச்சராக ஹேமந்த் சோரனுக்கு பதவி ஏற்பும் ரகசிய காப்பு பிராணமும் செய்து வைத்தார்.
இதையும் படிங்க:"தமிழீழம் உருவானால் தான் இந்தியாவுக்கு பாதுகாப்பு" - பழ.நெடுமாறன்!
இதன் மூலம் பழங்குடியினத்தை சேர்ந்த 49 வயதான ஹேமந்த் சோரன், ஜார்கண்ட் மாநிலத்தின் 14ஆவது முதலமைச்சராக பதவி ஏற்றார். ஹேமந்த் சோரன் பதவி ஏற்பு விழாவில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்க்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், உத்தரபிரதேச முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ், டெல்லி முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர். ஹேமந்த் சோரன் சட்டப்பேரவையில் பெரும்பான்மை பலத்தை நிரூபித்த பிறகு மேலும் அமைச்சர்கள் பதவி ஏற்பார்கள் என்று கூறப்படுகிறது.
ஹேமந்த் சோரன் பதவி ஏற்பு விழாவில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். முதல்வர் பதவி ஏற்பு விழா காரணமாக போக்குவரத்து பாதிப்பு நேரிடலாம் என்பதால் ராஞ்சியில் பள்ளிகள் மூடப்பட்டிருந்தன. பதவி ஏற்பு விழாவுக்கு முன்னதாக புதன் கிழமையன்று ஹேமந்த் சோரன் தமது மனைவி கல்பனா சோரனுடன் ராம்கார் மாவட்டத்தில் உள்ள நெம்ரா என்ற தமது சொந்த கிராமத்துக்கு சென்றார். அங்கு அவரது தாத்தா சோபரன் சோரனுக்கு மரியாதை செலுத்தினார். மேலும் சோபரன் சோரன் சிலை அமைந்துள்ள லுக்கையாடண்ட் பகுதிக்கு சென்ற ஹேமந்த் சோரன் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்