டெல்லி:18வது மக்களவை கூட்டத் தொடர் கடந்த ஜூன் 24ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு நாட்கள் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்பிக்கள் தற்காலிக சபாநாயகர் பரத்ருஹரி மஹ்தாப் முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டனர். தொடர்ந்து நேற்று (ஜூன்.26) மக்களவை சபாநாயகர் தேர்தல் நடைபெற்றது.
இதில் சபாநாயகராக பாஜக எம்பி ஓம் பிர்லா மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில், இன்று (ஜூன்.27) நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டு கூட்டத் தொடர் நடைபெற்றது. இதில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு கலந்து கொண்டு உரையாற்றினார். தொடர்ந்து மாநிலங்களவையின் அவைத் தலைவராக மத்திய சுகாதார அமைச்சர் ஜேபி நட்டா நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் மாநிலங்களவை அவைத் தலைவராக இருந்த நிலையில், நடந்த முடிந்த 18வது மக்களவை தேர்தலில் போட்டியிட்டு அவர் மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து மாநிலங்களவை அவைத் தலைவராக ஜேபி நட்டா நியமிக்கப்பட்டுள்ளார்.