ஹரியானா: நாடு முழுவதும் உள்ள 200-க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்களைச் சேர்ந்தவர்கள், விளைபயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை, விவசாயிகளுக்கு காப்பீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, டெல்லியில் பிப்ரவரி 13ஆம் தேதி பேரணி நடத்த உள்ளனர். இதற்காக நாடு முழுவதிலும் இருந்து விவசாயிகள் டெல்லியை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.
இதற்காக, ஹரியானாவைத் தாண்டியே விவசாயிகள் டெல்லியை நோக்கி செல்ல வேண்டும் என்பதால், அங்கு பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் தடை விதிக்கப்பட்டு உள்ளன. மனோகர் லால் கட்டர் தலைமையிலான ஹரியானா அரசு, மாநிலத்தின் 7 மாவட்டங்களுக்கு பிப்ரவரி 13 வரை இணைய சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவித்து உள்ளது.
இதன்படி, மாநிலத்தின் அம்பாலா, குருஷேத்ரா, கைதல், ஜிந்த், ஹிசார், ஃபடேபாத் மற்றும் சிர்சா ஆகிய 7 மாவட்டங்களில் இன்று (பிப்.11) காலை 6 மணி முதல் பிப்ரவரி 13 இரவு 11.59 மணி வரை இணையதள சேவை, பல்க் எஸ்எம்எஸ்கள், டாங்கில் சேவை உள்ளிட்டவற்றுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இவற்றில் சாதாரண வாய்ஸ் கால்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.