ஹரிதுவார் : உத்தரகாண்ட் மாநிலம் உத்தம் சிங் நகர் மாவட்டம் நானக்மட்டா குருத்வாரா கர்சேவா தலைவர் பாபா தரசெம் சிங் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் தொடர்புடைய ரவுடி அமர்ஜித் சிங் என்ற பிட்டுவை உத்தரகாண்ட் சிறப்பு அதிதீவிரப் படையினர் என்கவுன்டர் செய்து சுட்டு கொன்றனர்.
கடந்த மார்ச் 28ஆம் தேதி குருத்வாராவிற்குள் நுழைந்த மர்ம நபர்கள் இரண்டு பேர், பாபா தரசெம் சிங்கை துப்பாக்கியா சுட்டுக் கொன்று விட்டு இரு சக்கர வாகனத்தில் தப்பிச் சென்றனர். இந்த விவகாரம் மாநிலம் முழுவதும் பூதாகரமான நிலையில், போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ரவுடிகள் சரப்ஜித் சிங் மற்றும் அமர்ஜித் சிங்கிற்கு தொடர்பு இருப்பதை கண்டறிந்த போலீசார் இருவர் குறித்தும் தகவல் அளிப்பவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசி வழங்குவதாக அறிவித்தனர். இருப்பினும், துப்பு கிடைக்காத நிலையில் பரிசுத் தொகையை 1 லட்ச ரூபாயாக உயர்த்தினர்.
இந்நிலையில், சரப்ஜித் சிங் மற்றும் அமர்ஜித் சிங்கிற்கு குறித்து தகவல் கிடைத்த உத்தரகாண்ட் சிறப்பு அதிவிரைவுப் படை மற்றும் ஹரிதுவார் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது போலீசாரின் பிடியில் இருந்து தப்ப முயன்ற அமர்ஜித் சிங் என்ற பிட்டுவை போலீசார் என்கவுன்டர் செய்து கொன்றனர்.
அதேநேரம் மற்றொரு கொலையாளி தப்பிச் சென்றதாகவும் அவரை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டு உள்ளதாகவும் போலீசார் தெரிவித்து உள்ளனர். என்கவுன்டர் செய்யப்பட்ட அமர்ஜித் சிங் என்ற பிட்டு மீது 16 வழக்குகள் நிலுவையில் இருப்பதாக போலீசார் தெரிவித்து உள்ளனர். முன்னதாக இந்த வழக்கு தொடர்பாக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி உள்பட 5 பேர் மீது உத்தரகாண்ட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
பாபா தரசெம் சிங் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் மாநிலம் முழுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், விரைந்து வழக்கு விசாரணையை முடிக்கக் கோரி முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி உத்தரவிட்டு இருந்தார். இந்நிலையில் தான் வழக்கில் தொடர்புடைய அமர்ஜித் சிங்கை போலீசார் என்கவுன்டர் நடத்தி கொன்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க :அமெரிக்காவில் இந்திய மாணவர் பலி! ஒரு வாரத்தில் 2வது சம்பவம்! தொடரும் இந்தியர்களுக்கு எதிரான வன்முறை! மத்திய அரசின் நடவடிக்கை என்ன? - Indian Student Dies In US