லாஹவுல்-ஸ்பிடி:இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள ரோஹ்தாங் கணவாயில் அடர் பனி பிரதேச பகுதியில் 56 ஆண்டுகளுக்கு முன்பு விழுந்து நொறுங்கிய இந்திய விமானப்படை விமானத்தில் பயணித்த 4 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
இந்திய விமானப்படையின் 'ஏஎன்-12' போக்குவரத்து விமானம், 4 விமானிகள் உள்பட 102 வீரர்களுடன் 56 ஆண்டுகளுக்கு முன்பு இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள ரோஹ்தாங் கணவாய் பகுதியில் சென்றபோது விழுந்து நொறுங்கியது. இந்த சம்பவம் நிகழ்ந்து அரை நூற்றாண்டு கடந்த பிறகு, அந்த விமானத்தில் பயணித்த 4 வீரர்களின் உடல்கள், உறைந்த நிலையில், மீட்கப்பட்டுள்ளன. இது இந்தியாவின் மிக நீளமான மீட்பு மற்றும் தேடுதல் நடவடிக்கையாகும்.
இது தொடர்பாக லாஹவுல்-ஸ்பிடி காவல் துறை கண்காணிப்பாளர் மயங்க் சவுத்ரி கூறியதாவது:
"உடல்கள் கண்டுபிடிப்பு குறித்த தகவல், செயற்கைக்கோள் தொலைபேசி மூலம் ராணுவ பயணக் குழுவிடமிருந்து பெறப்பட்டது. லாஹவுல்-ஸ்பிடியின் தொலைதூர மற்றும் கடினமான பகுதியான 'சிபி -13' (சந்திரபாகா -13 சிகரம்) அருகே படால் என்ற இடத்தில் ஒரு குழுவினர் மலையேறும் பயணத்தை மேற்கொண்டனர்.
இதையும் படிங்க:வெளியானது பண்டிகை கால சிறப்பு ரயில்கள் குறித்த அறிவிப்பு; கடந்த ஆண்டை விட எவ்வளவு டிரிப் அதிகம்?
அப்போது செயற்கைக்கோள் தொடர்பு மூலம் பெறப்பட்ட தகவலின்படி, 4 உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. முதற்கட்ட விசாரணையில் இந்த உடல்கள் 1968-ம் ஆண்டு இந்திய விமானப்படையின் 'ஏஎன்-12' விமான விபத்துடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
அந்த விபத்து இந்திய ராணுவ விமான வரலாற்றில் மிகவும் சோகமான சம்பவங்களில் ஒன்றாகும். மோசமான வானிலை காரணமாக லாஹவுல் பள்ளத்தாக்கின் மலைப்பாங்கான பகுதியில் விமானம் விபத்துக்குள்ளானது. கடும் பனி மற்றும் உயரமான பகுதியில் உயிரிழந்த ராணுவ வீரர்கள் மற்றும் விமானத்தின் உடைந்த பாகங்கள் பனியில் புதைந்தன.
எனினும் பல ஆண்டுகளாக தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்நிலையில், 4 ராணுவ வீரர்களின் உடல்கள் உறைந்த நிலையில் அப்பகுதியிலிருந்து மீட்கப்பட்டுள்ளன. கடந்த 2018ம் ஆண்டில் 6,200 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள டாக்கா பனிப்பாறை முகாமில் ஒரு ராணுவ வீரரின் உடல் கண்டெடுக்கப்பட்டது.
'சந்திரபாகா-13' சிகரத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த நேரத்தில் மலையேறும் குழுவினரால் 4 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. உயிர் தியாகம் செய்த வீரர்களின் நினைவைப் போற்றும் வகையிலும், அவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் அளிப்பதிலும் இது ஒரு முக்கியமான படியாகும்.
வீரர்களின் உடல்கள், அடையாளம் காணபது மற்றும் பிற சம்பிரதாயங்களுக்காக லோசர் கிராமத்துக்கு கொண்டு வரப்படும். விமான பாகங்கள் மற்றும் உடல்கள் கண்டெடுக்கப்பட்ட பகுதி அதிக உயரத்தில் அமைந்துள்ளதால், அங்கு தேடுதல் பணி மிகவும் சவாலானது. இந்த மீட்பு பணி ராணுவத்தின் மலையேறும் குழுவின் விடாமுயற்சி மற்றும் நிபுணத்துவத்துத்து சான்றாகும்" என்றார் சவுத்ரி.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்