பெங்களூரு : முன்னாள் முதலமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டர் மீண்டும் பாஜகவில் இணைந்தார். கர்நாடக மாநிலத்தில் லிங்கயாத் சமூகத்தின் முகமாக காணப்படுபவர் ஜெகதீஷ் ஷெட்டர். நீண்ட ஆண்டுகள் பாஜகவில் இருந்த ஜெகதீஷ் ஷெட்டர், கடந்த ஆண்டு கர்நாடக சட்டப் பேரவை தேர்தலில் ஹூப்பள்ளி - தார்வாட் தொகுதியில் சீட்டு தராத கோபத்தில் பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
காங்கிரஸ் கட்சி தரப்பில் அவர் சட்டபேரவை தேர்தலில் போட்டியிட்ட நிலையில் எதிர்பாராத விதமாக தோல்வி அடைந்தார். இதையடுத்து கர்நாடக சட்டபேரவையில் எம்.எல்.சியாக அவருக்கு பதிவு வழங்கப்பட்டது. இந்நிலையில், முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா மற்றும் மாநில பாஜக தலைவர் பிஒய் விஜயேந்திரா முன்னிலையில் ஜெகதீஷ் ஷெட்டர் தன்னை மீண்டும் பாஜகவில் இணைத்துக் கொண்டார்.
பாஜக அலுவலகம் வந்த அவருக்கு கட்சி நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து மாநில பாஜக தலைவர் பிஒய் விஜயேந்திரா, உறுப்பினர் அட்டை மற்றும் பூங்கோத்து கொடுத்து ஜெகதீஷ் ஷெட்டரை கட்சியில் இணைத்துக் கொண்டார். இதனிடையே ஜெகதீஷ் ஷெட்டர் கட்சி தாவ இருந்தது குறித்து முன்னதாகவே மாநில துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் மறைமுகமாக கூறியுள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டரை மீண்டும் பாஜகவிற்குள் இழுக்க அக்கட்சித் தலைவர்கள் பலர் முயற்சித்ததாகவும், எதிர்வரும் பொதுத் தேர்தலை எதிர்கொள்ள பாஜகவிடம் போதிய வேட்பாளர்கள் இல்லாமல் பற்றாக்குறை நிலவுவதாகவும் துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் தெரிவித்து உள்ளார்.
இதையும் படிங்க :முல்லை பெரியாற்றில் புதிய அணை - கேரள அரசு திட்டவட்டம்! தமிழக அரசின் நடவடிக்கை என்ன?