டெல்லி : மக்களவை தேர்தலில் வென்று மீண்டும் ஆட்சியை கைப்பற்ற பாஜக தொண்டர்கள் அடுத்த 100 நாட்கள் புது வேகத்துடனும், தன்னம்பிக்கையுடன் அரசியல் பணியாற்ற வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார். டெல்லியில் உள்ள பாரத மண்டபத்தில் பாஜகவின் இரண்டு நாள் தேசிய மாநாடு நடைபெற்று வருகிறது.
இதில் இன்று (பிப். 18) இரண்டாவது நாள் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, நாட்டில் கழிப்பறை பிரச்சினை மற்றும் பெண்களின் கண்ணியம் குறித்து டெல்லி செங்கோட்டையில் பேசிய முதல் பிரதமர் தான் என்று கூறினார். எதிர்கால இந்தியா என்ற இலக்கை இளைஞர்கள் சக்தி, பெண்கள், விவசாயிகள் மற்றும் இளம் சமுதாயத்தினரை கொண்டு பாஜக ஒன்றிணைப்பதாக பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
இனி வரும் காலங்களில் தாய்மார்கள், சகோதரிகள் மற்றும் பெண் பிள்ளைகளுக்கான வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று பிரதமர் கூறினார். மிஷன் சக்தி பெண்களுக்கான பாதுகாப்பு நிறைந்த முழுமையான சுற்றுசூழலை உருவாக்கும் என்றும், 15 ஆயிரம் பெண்கள் தன்னாட்சி குழுக்கள் உருவாக வழிவகை செய்யப்படும் என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
விவசாயத்தில் விஞ்ஞான வளர்ச்சியை புகுத்தும் நோக்கமாக ட்ரோன் திதி திட்டம் செயல்படுத்தப்படும் என்றும், லக்பதி திதீஸ் திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் 3 கோடி பெண்கள் பயனடைய உள்ளதாகவும் பிரதமர் கூறினார். நாட்டு மக்களின் 500 ஆண்டு கால எதிர்பார்ப்பை பாஜக நிறைவு செய்து உள்ளதாகவும் அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டு உள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார்.