புவனேஷ்வர்: ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள பிரசித்தி பெற்ற பூரி ஜெகநாதர் கோயிலில் சந்தன் யாத்ரா திருவிழா நடைபெற்று வருகிறது. இதில், நேற்று (மே.29) இரவு திருவிழா நிகழ்வுகளை காண, நரேந்திர புஷ்கரணி கரையில் நூற்றுக்கணக்கான மக்கள் கூடியிருந்தனர். அப்போது, திருவிழாவில் ஒரு குழுவைச் சேர்ந்த பக்தர்கள் பட்டாசுகளை கொளுத்தி கொண்டாடினர்.
இதில் எதிர்பாராதவிதமாக எரிந்த பட்டாசு துண்டு ஒன்று, அங்கிருந்த பட்டாசு குவியலில் விழுந்து வெடிக்கத் தொடங்கியது. இதில், அனைத்து பட்டாசுகளும் ஒரே நேரத்தில் வெடித்து சிதறின. அப்போது பட்டாசுகள் கூட்டத்தில் இருந்தவர்கள் மீதும் விழுந்ததால் பலர் அலறியடித்துக் கொண்டு ஓடத் தொடங்கினர். இதில் கூட்ட நெரிசலில் சிக்கியும், பட்டாசு வெடிப்பிலும் பொது மக்கள் பலருக்கு தீக்காயம் ஏற்பட்டது.
பட்டாசு வெடித்து சிதறிய போது சிலர் தப்பிப்பதற்காக அங்கிருந்த நீர்நிலைகளில் குதித்ததாக போலீசார் தெரிவித்தனர். பட்டாசு வெடித்த விபத்தில் 3 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ள நிலையில் 30 பேர் வரை படுகாயம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. படுகாயமடைந்த மக்கள், மாவட்ட அரசு மருத்துவமனையிலும், தனியார் மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.