கல்பெட்டா:கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த ஜூலை மாத இறுதியில் தொடர் கனமழை பெய்தது. இடைவிடாத பெய்த பேய் மழையால் சூரல்மலை மற்றும் முண்டக்கை கிராமங்களில் ஜூலை 30ம் இரவு திடீர் நிலச்சரிவு ஏற்பட்டு, குடியிருப்புகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. மலையோர வீடுகள் மண்ணில் புதைந்தன. நிலச்சரிவில் சிக்கிய 400க்கும் மேற்பட்டோர் சடலமாக மீட்கப்பட்டனர்.
இந்த கோர விபத்தில், பல பேர் தங்களது குடும்பத்தை இழந்து நின்றதும், பெற்றோரை இழந்த குழந்தைகள், அரவணைப்பின்றி பசியால் துடித்த துயர நிகழ்வும் நாட்டையே உலுக்கியது. இந்நிலையில், இப்பேரழிவில் தனது தாய், தந்தை, தங்கை உட்பட 9 குடும்ப உறுப்பினரையும் இழந்து தவித்து வந்த இளம்பெண், தனது வருங்கால கணவனையும் சாலை விபத்தில் பறிகொடுத்த சோக நிகழ்வு, கேரள மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
வயநாட்டில் கடந்த ஜூன் 30ம் தேதி முண்டக்கை பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஸ்ருதியின் (24) பெற்றோர், தங்கை உட்பட 9 குடும்ப உறுப்பினர்கள் அனைவருமே உயிரிழந்துள்ளனர். நிலச்சரிவு ஏற்பட்டபோது, ஸ்ருதி கோழிக்கோடு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கணக்காளராக பணியில் இருந்துள்ளார். தனது ஒட்டுமொத்த குடும்பத்தையே இழந்து தவித்த ஸ்ருதிக்கு அவரது காதலன் ஜென்சன் (27) ஒரே துணையாக இருந்துள்ளார்.
ஜென்சனும், ஸ்ருதியும் பள்ளி பருவத்திலிருந்தே பழகி வந்துள்ளனர். நாளடைவில் இருவரும் காதலிக்கவும் தொடங்கினர். அம்பலவயல் அருகே உள்ள ஆண்டூரைச் சேர்ந்த ஜெர்சனுக்கு பெற்றோரும், ஜென்சி என்ற சகோதரியும் உள்ளனர். கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக பழகி வரும் இருவரது திருமணம் இந்தாண்டு டிசம்பரில் நடக்க இருந்தது. இதனிடையே, ஸ்ருதியின் குடும்பம் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்ததால், இந்த மாதம் பதிவு திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டிருந்தனர்.