டெல்லி: டெல்லி சட்டப் பேரவையின் 70 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பிப்ரவரி 5ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், ஆளும் ஆம் ஆத்மி கட்சியில் (Aam Aadmi Party) இருந்து 8 சட்டப்பேரவை உறுப்பினர்கள் பதவி விலகல் கடிதம் அளித்துள்ளனர். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தலைநகர் டெல்லியை கைப்பற்றுவதில் அரசியல் கட்சிகளுக்குள் உச்சபட்ச போட்டி நிலவுகிறது. ஆளும் ஆம் ஆத்மி, எதிர்க்கட்சியாக உள்ள பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு இடையே மும்முனைப்போட்டி நிலவுகிறது.
இந்நிலையில், எட்டு ஆம் ஆத்மி சட்டப்பேரவை உறுப்பினர்கள் (MLA's) தங்களுக்கு இந்த தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை என்று கூறி பதவி விலகல் கடிதம் அளித்துள்ளனர்.
பதவி விலகல் கடிதம் அளித்துள்ள 8 சட்டப்பேரவை உறுப்பினர்களின் பட்டியல்:
பாவனா கவுர்- பாலம் தொகுதி
பிஎஸ் ஜூன் - பிஜ்வாசன் தொகுதி
பவன் சர்மா - ஆதர்ஷ் நகர் தொகுதி
மதன்லால் - கஸ்தூர்பா நகர் தொகுதி
ராஜேஷ் ரிஷி - ஜனக்புரி தொகுதி
ரோஹித் மெஹ்ரௌலியா - திரிலோக்புரி தொகுதி
நரேஷ் யாதவ் - மெஹ்ராலி தொகுதி
கிரிஷ் சோனி - மடிபூர் தொகுதி
ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, மெஹ்ராலி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் நரேஷ் யாதவ் எழுதிய இரண்டு பக்க கடிதத்தில், தான் பதவி விலகுவதற்கான காரணங்களை குறிப்பிட்டுள்ளார். அதில், இந்திய அரசியலை ஊழலில் இருந்து விடுவிப்பதற்காக ஊழலுக்கு எதிரான அண்ணா ஹசாரே இயக்கத்தில் இருந்து ஆம் ஆத்மி கட்சி பிறந்ததாக தெரிவித்துள்ள நரேஷ் யாதவ், ஆனால் இப்போது ஆம் ஆத்மி கட்சியே ஊழல் புதைகுழியில் சிக்கிக் கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
நேர்மை அரசியலுக்காக நான் ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்தேன். ஆனால் இன்று நேர்மை எங்கும் தெரியவில்லை என்றும் எழுதியுள்ளார். மெஹ்ரௌலி சட்டப்பேரவையில் தனது கடைசி இரண்டு ஆண்டு காலப் பணியைப் குறித்து பதவி விலகல் கடிதத்தில் எழுதியிருந்த நரேஷ் யாதவ், 100 விழுக்காடு நேர்மையுடன் பணியாற்றியதாகவும் அதில் தெரிவித்துள்ளார்.