மஞ்சேரி:கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டம் அரிக்கோடு பகுதியைச் சேர்ந்தவர் 41 வயது மதிக்கத்தக்க நபர். மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் வசித்து வருகிறார். கடந்த 2006ஆம் ஆண்டு இவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை பிறந்து 10 ஆண்டுகள் ஆன நிலையில், தனது மகளுக்கு அவர் பாலியல் தொல்லை கொடுத்து உள்ளார்.
தொடர்ந்து ஏழு ஆண்டுகள் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த நபர், அது குறித்து வெளியே கூறினால் கொலை செய்து விடுவதாக மிரட்டி உள்ளார். இந்நிலையில், அந்த சிறுமி நாளடைவில் நோய்வாய்பட்டு காணப்பட்டுள்ளார். தொடர்ந்து உடல் நிலை மோசமானதை அடுத்து உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி கர்ப்பமாக இருப்பதை கண்டுபிடித்தனர். இதையடுத்து, கோழிகோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு மருத்துவர்களின் பரிந்துரையின் படி கருக்கலைப்பு செய்யப்பட்டு உள்ளது. மேலம், இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் அளித்த புகாரில் போலீசார் அந்த நபரை கைது செய்தனர்.
தொடர்ந்து வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், அவர் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் வெளியே வந்தால் வழக்கை கலைக்கூடும் என்பதால் ஜாமீன் வழங்கக் கூடாது என போலீசார் தர்ப்பில் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி வழக்கு விசாரணை முடியும் வரை அவருக்கு ஜாமீன் வழங்க மறுத்தார்.
இந்நிலையில், இந்த வழக்கின் இறுதி விசாரணை முடிவடைந்ததை அடுத்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார். அதில், பெற்ற மகளை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கிய தந்தைக்கு 104 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 1 லட்ச ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். மேலும் அபராதத்தை நபர் கட்ட தவறும் பட்சத்தில் கூடுதல் காலம் சிறையில் அடைக்கவும், அதேநேரம் அபராதத்தை செலுத்தினால் அதை சிறுமிக்கு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.
பெற்ற மகளுக்கு தந்தையே பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் கேரளாவையே உலுக்கியுள்ளது. அதேநேரம் மகளுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த தந்தைக்கு 104 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்த நீதிமன்றத்தின் தீர்ப்பை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.
இதையும் படிங்க:சோப்பு வழுக்கி 3வது மாடியில் இருந்து தவறி விழுந்த பெண்! சினிமாவை மிஞ்சிய சம்பவம்! வீடியோ வைரல்! - bangalore women viral video