சண்டிகர்:விவசாயிகளின் போராட்டத்துக்கு பொதுமக்கள் ஆதரவு தரவேண்டும். கானௌரி எல்லை பகுதியில் நாளை (ஜனவரி 4ஆம் தேதி) பொதுமக்கள் திரள வேண்டும் என விவசாயிகள் சங்க தலைவர்களில் ஒருவரான ஜக்ஜித் சிங் தலேவால் கேட்டுக்கொண்டுள்ளார்.
வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதாரவிலை நிர்ணயத்துக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நவம்பர் 26ஆம் தேதி முதல் விவசாயிகள் சங்க தலைவர்களில் ஒருவரான ஜக்ஜித் சிங் தலேவால் சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார்.
அவரது உண்ணாவிரதத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் "மருத்துவ உதவியுடன் தலேவால் உண்ணாவிரதம் மேற்கொள்ளலாம்," என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கூறியுள்ளனர்.
இந்தநிலையில் தலேவால் வெளியிட்டுள்ள வீடியோவில்,"விவசாயிகளின் போராட்டத்துக்கு பொதுமக்கள் ஆதரவு தரவேண்டும். கானௌரி எல்லை பகுதியில் நாளை (ஜனவரி 4ஆம் தேதி) பொதுமக்கள் திரள வேண்டும். வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை வழங்க வலியுறுத்தி நாங்கள் போராட்டம் நடத்தி வருவது உங்களுக்கு தெரியும். எனவே இந்த கோரிக்கையை வலியுறுத்தி நடத்தும் போராட்டத்துக்கு இந்த நாட்டு மக்களும் ஆதரவு தர வேண்டும்.
இதையும் படிங்க:முன்னாள் பிரதமர் மறைந்த மன்மோகன் சிங்குக்கு நினைவிடம்...இடம் தேர்வு செய்யும் பணி தீவிரம்!
அப்போதுதான் இந்த போராட்டத்தில் வெற்றி பெற முடியும். பொதுமக்களிடம் நான் கை கூப்பி கேட்டுக்கொள்வது என்னவெனில் கானௌரி எல்லை பகுதியில் உங்கள் அனைவரையும் நாளை நான் எதிர்பார்க்கின்றேன். நாளை நீங்கள் வரும் பட்சத்தில் உங்கள் அனைவருக்கும் நான் நன்றியுள்ளவனாக இருப்பேன்,"என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உச்ச நீதிமன்ற குழுவுடன் விவசாயிகள் சந்திக்கவில்லை:இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய விவசாயிகளின் தலைவர் சர்வான் சிங் பாந்தர்,"பஞ்சகுலாவில் உச்ச நீதிமன்றம் அமைத்துள்ள உயர் மட்டக்குழுவுடன் விவசாயிகள் பேச்சுவார்த்தை நடத்தப்போவதில்லை. இது நீதிமன்றத்தோடு தொடர்புடைய விஷயம் அல்ல என்று நாங்கள் ஏற்கனவே தெளிவுபடுத்தி இருக்கின்றோம். மத்திய அரசு எங்களோடு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று நாங்கள் கோரிக்கை விடுத்து வருகின்றோம். விவசாயிகளின் போராட்டத்தில் பிளவு படுத்தும் வகையில் இன்று பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. குழுவின் விதிகள், நிபந்தனைகள் காரணமாக நாங்கள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கப்போவதில்லை," என்றார்.
குறைந்த பட்ச ஆதாரவிலைக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் அளிப்பது குறித்த கோரிக்கை குறித்து மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த முன் வந்தால், மட்டுமே பேச்சுவார்த்தையில் பங்கேற்போம் என விவசாயிகள் தரப்பில் கூறப்பட்டிருப்பதாக பஞ்சாப் அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறது.