பெங்களூரு : கர்நாடக மாநிலம் பெங்களூருவில் மெட்ரோ ரயில் சேவைகள் இயங்கி வருகின்றன. இந்நிலையில், கடந்த பிப்ரவரி 18ஆம் தேதி ராஜாஜி நகர் மெட்ரோ ரயில் நிலையத்தில், முதியவர் ஒருவர் அசுத்தமான ஆடைகளுடன் மெட்ரோ ரயிலில் பயணிக்க பாதுகாப்பு முனையத்திற்கு வந்து உள்ளார்.
பயணிகளிடம் சோதனையில் ஈடுபட்ட பாதுகாப்பு மேற்பார்வையாளர், முதியவரை மெட்ரோ ரயிலில் பயணிக்க அனுமதி மறுத்ததாக கூறப்படுகிறது. முதியவர் முறையான பயணச்சீட்டு வைத்து இருந்த போதும் அவர் பயணிக்க பாதுகாப்பு மேற்பார்வையாளர் அனுமதிக்க மறுத்ததாக சொல்லப்படுகிறது.
முதியவர் அசுத்தமான உடை அணிந்து இருந்ததாலும், கையில் சாக்கு மூட்டையுடன் வந்து இருந்ததாலும் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், இது குறித்து சக பயணிகள் பாதுகாப்பு மேற்பார்வையாளரிடம் முறையிட்டு உள்ளனர். முதியவர் வைத்திருந்த மூட்டையில் மெட்ரோ ரயிலில் பயணிக்க அனுமதி மறுக்கப்பட்ட எந்த பொருட்களும் இல்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், இது குறித்து வீடியோவை பயணி ஒருவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டார். மேலும் அந்த பதிவில், "மெட்ரோ ரயில் விஐபிக்களுக்கு மட்டுமானதா? மெட்ரோவில் பயணிப்பதற்கு என தனி ஆடை குறியீடு உள்ளதா? ராஜாஜி நகர் மெட்ரோ ரயில் நிலையத்தில் விவசாயியின் உரிமைக்காகப் போராடிய கார்த்திக் சி ஐராணியின் நடவடிக்கைகளை நான் பாராட்டுகிறேன். எல்லா இடங்களிலும் இதுபோன்ற ஹீரோக்கள் நமக்குத் தேவை" என்று பதிவிட்டு இருந்தார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவிய நிலையில், இந்த விவகாரத்தில் தொடர்புடைய பாதுகாப்பு மேற்பார்வையாளர் பணி நீக்கம் செய்யப்பட்டதாக பெங்களூரு மெட்ரோ தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக பெங்களூரு மெட்ரோ நிர்வாகம், "பெங்களூரு மெட்ரோ ஒரு பொது போக்குவரத்து என்றும் ராஜாஜி நகர் சம்பவம் விசாரிக்கப்பட்டு, பாதுகாப்பு மேற்பார்வையாளரின் பணி நீக்கம் செய்யப்பட்டதாகவும் பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துவதாகவும்" தெரிவித்து உள்ளது.
இதையும் படிங்க :சாலையில் திருமணம்.. கேள்விபட்டிருக்கலாம்.. சாலைக்கே திருமணமா? கேரளாவில் ரூசிகரம்! என்ன நடந்தது தெரியுமா?