சிம்லா: மக்களவை தேர்தலில் இமாச்சல பிரதேசம் மாநிலம் மண்டி தொகுதியில் போட்டியிட்டு நடிகை கங்கனா ரனாவத் வெற்றி பெற்றார். இந்நிலையில் கங்கனா ரனாவத் வெற்றியை எதிர்த்து கின்னார் மாவட்டத்தை சேர்ந்த லயக் ராம் நெகி இம்மாச்சல பிரதேச உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அந்த மனுவில், தவறுதலாக தேர்தல் நடத்தும் அதிகாரி தனது வேட்புமனுவை நிராகரித்ததாக லயக் ராம் நெகி தெரிவித்துள்ளார். மேலும், வனத்துறையின் முன்னாள் பணியாளரான லயக் ராம் நெகி, தனக்கு முன்கூட்டிய ஓய்வு கிடைத்ததாகவும், தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் வேட்பு மனுக்களுடன், தன் மீது துறை சார்ந்த நிலுவைத் தொகை ஏதும் இல்லை என்கிற சான்றிதழை சமர்பித்ததாக கூறினார்.
இருப்பினும், மின்சாரம், குடிநீர், தொலைபேசி ஆகிய துறைகளில் இருந்து நிலுவை தொகை இல்லை என்கிற சான்றிதழை வாங்கி சமர்ப்பிக்குமாறு ஒருநாள் அவகாசம் வழங்கப்பட்டதாகவும், பின்னர் அவற்றை சமர்ப்பித்தபோது, தேர்தல் நடத்தும் அலுவலர் ஏற்காமல் வேட்புமனுவை நிராகரித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.