டெல்லி: இந்தியாவிலுள்ள அரசியல் கட்சிகள் நன்கொடைகளை தேர்தல் பத்திரங்கள் மூலம் வழங்குவதில் வெளிப்படை இல்லை எனவும், இது அரசியல் சட்டத்துக்கு முரணானது என உச்ச நீதிமன்றம் தேர்தல் பத்திரச் சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டது. மேலும், இந்தியாவிலுள்ள கட்சிகளுக்கு வழங்கும் தேர்தல் பத்திர முறையை ரத்து செய்த உச்ச நீதிமன்றம், இதுவரை கட்சிகள் பெற்ற தொகை உள்ளிட்ட தகவல்களை மார்ச் 6ஆம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என தெரிவித்து இருந்தது.
மேலும், எஸ்.பி.ஐ வங்கி வெளியிடும் தேர்தல் பத்திரங்கள் தொடர்பான தகவல்களை இந்தியத் தேர்தல் ஆணையம் தனது இணையதளப் பக்கத்தில் வெளியிட வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், தேர்தல் பத்திரங்கள் தொடர்பான தகவல்களை வெளியிட கால அவகாசம் வழங்க வேண்டும் என எஸ்பிஐ வங்கி உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தது.
தேர்தல் பத்திரங்கள் குறித்த தரவுகளை வெளியிடக் கோரிய உத்தரவில் ஜூன் 30ஆம் தேதி வரை கால அவகாசம் கோரிய எஸ்பிஐ வங்கி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு, எஸ்பிஐ வங்கியின் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
மேலும், எஸ்பிஐ வங்கி மார்ச் 12 மாலைக்குள் தேர்தல் பத்திரத்தின் தரவுகளை வெளியிட வேண்டும் என்றும், எஸ்பிஐ வங்கி தரும் தரவுகளைத் தொகுத்து இந்திய தேர்தல் ஆணையம் மார்ச் 15ஆம் தேதி மாலை 5 மணிக்குள் தனது இணையதளத்தில் வெளியிட வேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
இதனையடுத்து, இன்று (மார்ச் 14) தேர்தல் பத்திரங்களை வாங்கியவர்கள் மற்றும் பெற்றவர்கள் விவரங்களை உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, தேர்தல் ஆணையத்தின் இணையதளப் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் 12ஆம் தேதி எஸ்பிஐ வங்கி தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களை, இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைத்தது. உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, எஸ்பிஐ வங்கி தேர்தல் பத்திரங்கள் தொடர்பான ஆவணங்களை தங்களிடம் வழங்கியதாகவும், அதனை தாங்கள் பெற்றுக் கொண்டதாகவும் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.