டெல்லி: நாடு முழுவது மக்களவை தேர்தல் திருவிழா 7 கட்டங்களாக நடைபெற்று வருகின்றன. இதில் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி, தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட 17 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 மக்களவை தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் நடத்தப்பட்டது.
அதைத் தொடர்ந்து ஏப்ரல் 26ஆம் தேதி கர்நாடகா, கேரளா, இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட 12 மாநிலங்கள், யூனியன் பிரதேசத்தில் உள்ள 88 தொகுதிகளுக்கு 2வது கட்ட மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. முன்னதாக 89 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நட்அத்த திட்டமிடப்பட்டு இருந்த நிலையில், கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி மத்திய பிரதேச மாநில பெடூல் தொகுதி பகுஜான் சமாஜ் கட்சி வேட்பாளர் அசோக் பாலவி மாரடைப்பால் உயிரிழந்தார்.
இதையடுத்து அந்த தொகுதிக்கு மட்டும் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. மே 7ஆம் தேதி நடைபெறும் மூன்றாவது கட்ட மக்களவை தேர்தலுடன் சேர்த்து பெடூல் மக்களவை தொகுதிக்கும் தேர்தல் நடத்தப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மூன்றாவது கட்ட மக்களவை தேர்தல் மே 7ஆம் தேதி நடைபெற உள்ளது.
இந்நிலையில், முதல் மற்றும் இரண்டாம் கட்ட மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு சதவீதத்தை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டு உள்ளது. அதன்படி முதற்கட்ட மக்களவை தேர்தலில் ஒட்டுமொத்தமாக 66.14 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. அதைத் தொடர்ந்து இரண்டாவது கட்ட மக்களவை தேர்தலில் 66.71 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.