பாட்னா: வடமாநிலங்களில் வரலாறு காணாத அளவில் கடும் வெப்ப அலை வீசி வருகிறது. குறிப்பாக தலைநகர் டெல்லி, பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் குறிப்பிட்ட அளவை காட்டிலும் வெயிலின் தாக்கம் நடப்பாண்டில் அதிகரித்து காணப்படுகிறது. கடும் வெப்ப அலை காரணமாக மக்கள் கடும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.
பீகார் மாநிலத்தில் கடும் வெப்ப அலை காரணமாக ஏறத்தாழ 80 பேர் உயிரிழந்து இருக்கக் கூடும் என தகவல் வெளியாகி உள்ளது. மேலும், 300 பேர் வரை கடும் வெப்ப அலை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அரசு தரப்பில் 27 பேர் மட்டுமே கடும் வெப்பம் காரணமாக உயிரிழந்ததாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து மாநில பேரிடர் மேலாண்மை துறை செய்தி தொடர்பாளர் கூறுகையில், பெகுசராய், அர்வல், பக்சர் மற்றும் ரொஹ்டஸ் ஆகியா மாவட்டங்களில் அதிகபட்சமாக 80 பேர் வரை கடும் வெப்பம் காரணமாக உயிரிழந்து இருக்கலாம் என தகவல் கிடைத்துள்ளதாக தெரிவித்தார். இருப்பினும், உயிரிழந்தவர்கள் இறப்பு குறித்து உறுதி செய்யப்படாத நிலையில் வெப்ப அலையின் காரணமாகத் தான் அவர்கள் உயிரிழந்தனரா என்ற சந்தேகம் நிலவுவதாக அவர் தெரிவித்தார்.
பாட்னா கயா ரயில் நிலையத்தில் ரயிலுக்காக காத்திருந்த இரண்டு பேர் வெப்ப அலை காரணமாக சுருண்டு விழுந்து உயிரிழந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பீகார் தலைநகர் பாட்னாவில் வெப்பம் காரணமாக மூன்று பேர் உயிரிழந்தனர். அதிகபட்சமாக அவுரங்கபாத்தில் வெப்ப அலை காரணமாக அதிகளவில் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.