புதுடெல்லி: சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கை விசாரிக்க, இரண்டு பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் உட்பட மூன்று பேர் கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழுவை (SIT) அமைத்து உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது.
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சூர்யகாந்த் , உஜால் புயான் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த சிறப்புக் குழுவை அமைத்து இன்று உத்தரவிட்டுள்ளது. இந்த மூவரில் குழுவில் இடம்பெற்றுள்ளவர்களில் டிஐஜி சரோஜ் குமார் தாகூர் பிகாரை சேர்ந்தவர். எஸ்பி ஐமேன் ஜமால் உத்தரப் பிரதேச மாநிலத்தையும், எஸ்பி பிருந்தா கர்நாடகா மாநிலத்தை சேர்ந்தவர்கள், அதாவது இந்த சிறப்புப் புலனாய்வுக் குழுவில் இடம்பெற்றுள்ள மூவரில் யாரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் அல்ல என்று நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் இந்தக் குழு தமது விசாரணை அறிக்கையை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் சமர்பிக்க வேண்டும் என்றும், அவர் இதனை விசாரிக்க பொருத்தமான அமர்வை அமைக்கலாம் எனவும் உச்ச நீதிமன்றம் தமது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.
அவ்வாறு அமைக்கப்படும் அமர்வின் முன், சிறப்பு புலனாய்வுக் குழு தமது விசாரணை குறித்த நிலை அறிக்கையை அவ்வபோது சமர்பிக்க வேண்டும் ( வாரம் ஒருமுறை). வழக்கின் தர்க்கரீதியான நடைமுறை முடியும் வரை இந்த நடைமுறையை தொடர வேண்டும் என்றும் நீதிமன்றம் இன்றைய தமது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.
சென்னை , அண்ணாநகரைச் சேர்ந்த சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பாக போக்சோ சட்டத்தின்கீழ் பதியப்பட்ட வழக்கின் விசாரணையை, அண்ணா நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இருந்து சிபிஐக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் அக்டோபர் 1 ஆம் தேதி பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதித்து, நவம்பர் 11 ஆம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.