தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தேர்தல் பத்திரம்: ரூ.650 கோடி நன்கொடை பெற்றதா திமுக? யார் கிட்ட இருந்து தெரியுமா? தேர்தல் ஆணையம் கூறுவது என்ன? - Electoral Bond Case

Electoral Bond: தேர்தல் பத்திரம் மூலம் நாட்டிலேயே அதிகபட்சமாக பாஜக 6 ஆயிரத்து 987 கோடி ரூபாய் நன்கொடை பெற்று உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டு உள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. திமுக ஏறத்தாழ 656 கோடி ரூபாய் நன்கொடை பெற்று உள்ளதாகவும் குறிப்பாக லாட்டரி கிங் சாண்டியாகோ மார்ட்டினின் பியூச்சர் கேமிங் நிறுவனத்திடம் இருந்து ஏறத்தாழ 509 கோடி ரூபாய் பெற்று உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 17, 2024, 5:55 PM IST

Updated : Apr 3, 2024, 3:33 PM IST

டெல்லி : அரசியல் கட்சிகள் தேர்தல் பத்திரங்கள் மூலம் வாங்கிய நிதிகள் குறித்த கூடுதல் தகவல்கள் கொண்ட அறிக்கையை இந்திய தேர்தல் ஆணையம் தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டு உள்ளது. அதிகபட்சமாக பாஜக 6 ஆயிரத்து 987 கோடியே 40 லட்ச ரூபாயை தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடையாக பெற்று உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

2017-78 முதல் 2023 -24 வரையிலான ஆண்டில் பாஜக இந்த தொகையை பெற்று உள்ளதாகவும் அதிகபட்சமாக 2019-20 நிதி ஆண்டில் 2 ஆயிரத்து 555 கோடி ரூபாயை நன்கொடையாக பெற்று உள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. பாஜகவை தொடர்ந்து இரண்டாவது பெரிய கட்சியாக திரிணாமுல் காங்கிரஸ் ஆயிரத்து 397 கோடி ரூபாயை தேர்தல் பத்திரம் மூலம் நன்கொடை பெற்று இருப்பது தெரியவந்து உள்ளது.

மூன்றாவதாக காங்கிரஸ் கட்சி ஆயிரத்து 334 கோடியே 35 லட்ச ரூபாயை தேர்தல் பத்திரம் மூலம் நிதி திரட்டி உள்ளது. நான்காவது இடத்தில் தெலங்கானா மாநிலத்தை சேர்ந்த பாரத ராஷ்டிர சமிதி கட்சி ஆயிரத்து 322 கோடி ரூபாய் நன்கொடை திரட்டி உள்ளது. ஒடிசாவை சேர்ந்த பிஜூ ஜனதா தளம் 944 கோடியே 5 லட்ச ரூபாயை தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை பெற்று உள்ளதாக கூறப்பட்டு உள்ளது.

அதன்பின் வரிசையாக ஆந்திர பிரதேசத்தின் ஒய்.எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி 442 கோடியே 8 லட்ச ரூபாயும், தெலுங்கு தேசம் கட்சி 181 கோடியே 35 லட்ச ரூபாயும் நன்கொடை ஈட்டி உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டு உள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. உத்தர பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சி 14 கோடியே 5 லட்ச ரூபாயும், அகாலி தளம் 7 கோடியே 26 லட்ச ரூபாயும் திரட்டி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரை திமுக 656 கோடி ரூபாயை தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடையாக பெற்று உள்ளதாக கூறப்படுகிறது. இதில் லாட்டரி கிங் சாண்டியாகோ மார்டடினின் பியூச்சர் கேமிங் நிறுவனத்திடம் இருந்து ஏறத்தாழ 509 கோடி ரூபாயை திமுக தேர்தல் பத்திரம் மூலம் நன்கொடையாக பெற்று இருப்பதாக தகவல் கூறப்படுகிறது.

அதேபோல் அதிமுக 6 கோடியே 5 லட்ச ரூபாயும், பரூக் அப்துல்லாவின் ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி 50 லட்ச ரூபாயும் தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை திரட்டி உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனிடையே தனியார் நிறுவனங்கள் எந்த கட்சிக்கு எவ்வளவு நிதி வழங்கி உள்ளது என்பதை கண்டறியும் தேர்தல் பத்திர எண்களை எஸ்பிஐ வங்கி வெளியிடவில்லை என உச்ச நீதிமன்றத்தில் முறையிடப்பட்ட நிலையில், நாளை (மார்ச்.18) அது குறித்த விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க :அருணாசல பிரதேசம், சிக்கிமில் வாக்கு எண்ணிக்கை தேதி மாற்றம்! என்ன காரணம்?

Last Updated : Apr 3, 2024, 3:33 PM IST

ABOUT THE AUTHOR

...view details