டெல்லி: ஹரியானா மற்றும் ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் தேதியை இந்தியத் தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது. இதனை, இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார், தேர்தல் ஆணையர்கள் ஞானேஷ் குமார் மற்றும் சந்து ஆகியோர் அறிவித்தனர். முன்னதாக, செப்டம்பர் 30, 2024-க்குள் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டமன்றத்திற்கு தேர்தல் நடத்த வேண்டும் என கடந்த டிசம்பரில் உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு அறிவுறுத்தி இருந்தது.
ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத் தேர்தல்:90 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட ஜம்மு காஷ்மீரில் 74 பொது தொகுதிகளாகவும், 9 எஸ்டி மற்றும் 7 தனித் தொகுதிகளாகவும் உள்ளன. இந்த நிலையில், ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு மூன்று கட்டங்களாக நடைபெறுகிறது. இதன்படி, செப்டம்பர் 18, 25 மற்றும் அக்டோபர் 1 ஆகிய நாட்களில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
அதேநேரம், ஆகஸ்ட் 20, 29 மற்றும் செப்டம்பர் 5 ஆகிய நாட்களில் வேட்புமனுத் தாக்கல் தொடங்கப்படுகிறது. மேலும், வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 4ஆம் தேதி நடைபெறுகிறது. 2024, ஜூலை 25 அடிப்படையில், மொத்தம் 87.09 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். மேலும், 11,838 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன.