டெல்லி:வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடக் கூடிய 150 மாவட்ட ஆட்சியர்களை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடர்பு கொண்டு பேசியதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். இந்த பதிவு வேகமாக பரவிய நிலையில், இந்த விவகாரத்தில் இந்திய தேர்தல் ஆணையம் தலையிட்டது.
150 மாவட்ட ஆட்சியர்களிடம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதாக எழுந்த விவகாரம் குறித்து இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை என்றும், எந்த மாவட்ட ஆட்சியரும் இது தொடர்பாக புகார் அளிக்காத நிலையில், இது தொடர்பான ஆதாரங்களை வழங்குமாறு ஜெய்ராம் ரமேஷ்க்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக திங்கட்கிழமை (ஜூன்.3) ஆதாரங்களை வழங்குமாறு தேர்தல் ஆணையம் கூறி இருந்தது. இந்நிலையில், கூடுதலாக ஒரு வாரம் கால அவகாசம் வழங்கக் கோரி ஜெய்ராம் ரமேஷ் தரப்பில் தேர்தல் ஆணையத்திடம் முறையிடப்பட்டது. இந்நிலையில், ஜெய்ராம் ரமேஷின் கோரிக்கையை நிராகரித்த இந்திய தேர்தல் ஆணையம், இன்று (ஜூன்.3) இரவு 7 மணிக்கு ஆதாரங்களை வழங்குமாறு கடிதம் எழுதியுள்ளது.
இது தொடர்பாக தேர்தல் ஆணையம் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷுக்கு எழுதிய கடிதத்தில், "மாவட்ட ஆட்சியர்களிடம் உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதாக வெளியிட்ட விவகாரத்தில் கால நீட்டிப்புக்கான உங்கள் கோரிக்கையை முற்றிலுமாக நிராகரித்து, இன்று (ஜூன்.3) மாலை 7 மணிக்குள் உங்கள் குற்றச்சாட்டின் உண்மை பதிலைத் தாக்கல் செய்யுமாறு உங்களுக்கு அறிவுறுத்துகிறது இந்த விவகாரம் மற்றும் ஆணையம் தகுந்த நடவடிக்கை எடுக்கத் தொடரும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:இமாச்சலில் நீண்ட இழுபறிக்கு பின் சுயேட்சை எம்எல்ஏக்கள் ராஜினாமா ஏற்பு! காங்கிரஸ் போடும் திட்டம் என்ன? - Himachal Pradesh MLAs Issue