ஐதராபாத்:தெலங்கானா மாநிலம் சிர்சில்லாவில் நடைபெற்ற தேர்தல் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் முதலமைச்சரும், பாரத் ராஷ்டிர சமிதி கட்சியின் தலைவருமான சந்திரசேகர் ராவ், காங்கிரஸ் கட்சிக்கு குறித்து அவதூறு கருத்துகளை வெளியிட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் கட்சித் தரப்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதுகுறித்து சந்திரசேகர ராவ் விளக்கம் அளிக்குமாறு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் வழங்கியது. இதற்கு கேசிஆர் தரப்பில் விளக்கம் தேர்தல் ஆணையத்தில் அளிக்கப்பட்டது. அவர் அளித்த பதிலில், தனது வார்த்தைகளை அதிகாரிகள் சரியாக புரிந்து கொள்ளவில்லை என்று தெரிவித்து இருந்தார்.
மேலும் அதிகாரிகளுக்கு உள்ளூர் பேச்சு வழக்கு புரியவில்லை என்றும் காங்கிரஸ் தலைவர்கள் சில கருத்துக்களை மட்டும் தேர்ந்தெடுத்து அதை புகாராக தெரிவித்து உள்ளதாகவும் கூறி இருந்தார். மேலும், அவர் கூறிய கருத்துகளின் ஆங்கில மொழி பெயர்ப்பு சரியாக செய்யப்படவில்லை என்றும் காங்கிரஸின் கொள்கைகள் மற்றும் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் ஏற்பட்ட தோல்வியை மட்டும் தான் குறிப்பிட்டதாகவும், ஆனால், தேர்தல் ஆணையத்திற்கு வழங்கப்பட்ட புகாரில் பல சொற்கள் திரித்து வழங்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்து இருந்தார்.