மும்பை :காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தவும், இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒருங்கிணைக்கவும் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை பாரத் ஜோடோ யாத்ரா என்ற இந்திய ஒற்றுமை பயணத்தை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 8ஆம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கிய ராகுல் காந்தி ஏறத்தாழ 150 நாட்கள் பல்வேறு மாநிலங்களில் சுற்றுப்பயணம் செய்து ஜம்மு காஷ்மீரில் நிறைவு செய்தார்.
அதன் தொடர்ச்சியாக, மணிப்பூரில் இருந்து மும்பை வரையிலான பாரத் நியாய யாத்ரா என்ற பெயரில் கடந்த ஜனவரி 14ஆம் தேதி வடகிழக்கு மாநிலங்களில் ராகுல் காந்தி தனது அடுத்த யாத்திரையை தொடங்கினார். இந்த யாத்திரையானது நடைபயணமாகவும், பேருந்திலும் மேற்கொள்ளப்பட்டது.
மணிப்பூரில் தொடங்கிய ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ நியாய யாத்திரை அசாம், நாகாலாந்து, ஜார்கண்ட், மேற்கு வங்கம், பீகார், சத்தீஸ்கர், ராஜஸ்தான், உத்தரபிரதேசம், மத்தியப் பிரதேசம், குஜராத் உள்ளிட்ட 14 மாநிலங்களில் உள்ள 85 மாவட்டங்களைக் கடந்து மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் இன்று (மார்ச். 17) நிறைவடைகிறது. ஏறத்தாழ 63 நாட்கள் இந்த யாத்திரை நடைபெற்றுள்ளது.