டெல்லி : விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. மக்களவை தேர்தலுக்கான அறிவிப்பை வெகு விரைவில் இந்திய தேர்தல் ஆணையம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலுக்கு முன்னதாக தேசியக் கட்சிகளிடையே கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை தீவிரம் அடைந்து உள்ளது.
ஒரு புறம் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில், தொகுதி பங்கீடு குறித்து மவுனம் காத்து வரும் நிலையில், மற்றொரு புறம் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தலைமையிலான இந்தியா கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம் அடைந்து உள்ளது. உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ் - சமாஜ்வாதி இடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை அடைந்து உள்ளது.
மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு 17 இடங்களை ஒதுக்கி உள்ளதாக சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்து உள்ளார். இதனிடையே தலைநகர் டெல்லியிலும் காங்கிரஸ் - ஆம் ஆத்மி இடையிலான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை எட்டி உள்ளதாக கூறப்படுகிறது.
மொத்தம் 7 மக்களவை தொகுதிகளை கொண்ட டெல்லியில் ஆம் ஆத்மி 4 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 3 இடங்களிலும் போட்டியிட முடிவு எட்டப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக காங்கிரஸ் உடனான தொகுதி பங்கீடு இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளதாகவும் அடுத்த இரண்டு அல்லது மூன்று நாட்களில் முடிவு அறிவிக்கப்படும் என்றும் ஆம் ஆத்மி கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தகக்து.