புதுடெல்லி: விதிகள் அனுமதிக்காதபட்சத்தில், அரசுப் பணி நியமனங்கள் தொடர்பான விதிமுறைகளை இடையிலோ அல்லது ஆட்சேர்ப்பு நடைமுறைகள் தொடங்கிய பின்னரோ, பணி நியமனங்களை நிர்வகிக்கும் அமைப்பு மாற்ற முடியாது என்று குறிப்பிடத்தக்க தீர்ப்பை உச்ச நீதிமன்றம் இன்று வழங்கியுள்ளது. ஆட்டத்தின் விதிமுறைகளை அதன் நடுவில் மாற்ற முடியாது என்று நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான நீதிபதிகள் ஹிருதிகேஷ் ராய், பி.எஸ்.நரசிம்மன், பங்கஜ் மித்தல், மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த தீர்ப்பை அளித்துள்ளது. அரசுப் பணிகளுக்கு ஆட்களை தேர்வு செய்யும் அமைப்பு, தெரிவு நடைமுறையின் வெவ்வேறு நிலைகளுக்கு தனித்தனி வரைமுறைகளை வகுக்க முடியும் என்றாலும், ஆட்சேர்ப்பு நடைமுறைகளுக்கு இடையிலோ அல்லது தொடங்கிய பின்னரோ விதிமுறைகளை மாற்ற முடியாது என்று தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு தமது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.
அவ்வாறு, தற்போதைய விதிமுறைகள் அல்லது விளம்பரத்தின்கீழ் பணி நியமன விதிமுறை மாற்றங்கள் அனுமதிக்கப்படுமேயானால், அது அரசியலமைப்புச் சட்டத்தின் 14வது பிரிவின் அம்சங்களை பூர்த்தி செய்ய வேண்டும் என்பதுடன், அந்த முடிவு தன்னிச்சையாக எடுக்கப்படவில்லை என்பதும் உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தமது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: 21 பள்ளிகளின் CBSE அங்கீகாரம் ரத்து; திடீர் ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை!
அரசுப் பணிகளுக்கு நபர்களை தேர்வு செய்யும் அமைப்புகள், தற்போதுள்ள விதிகளுக்கு உட்பட்டு, இச்செயல்முறையை ஒரு தர்க்கரீதியான முடிவுக்கு கொண்டு வர பொருத்தமான நடைமுறை உருவாக்கலாம். இந்த நடைமுறை வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் வலியுறுத்தி உள்ளனர்.
அரசுப் பணி நியமனம் தொடர்பான வழக்கில் ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை எதிர்த்து தேஜ் பிரகாஷ் பதக் உள்ளிட்டோர் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, இவ்வழக்கை தலைமை நீதிபதி தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அமர்வு விசாரிக்க பரிந்துரைத்தது.