கரூர்: தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியை காதகன், சனிகாரன், கருநாகம் போன்ற கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தி சில நாள்களுக்கு முன்பு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக சீமான் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கக் கோரி கரூர் வழக்கறிஞர் தமிழ் இராஜேந்திரன் அக்டோபர் 7-ஆம் தேதி நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அதனடிப்படையில், அக்டோபர் 14-ஆம் தேதி கரூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் எண்-1 நீதிபதி பரத்குமார் பிறப்பித்த உத்தரவில், சீமான் மீது தொடரப்பட்டுள்ள வழக்கு தொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தான்தோன்றி மலை காவல் ஆய்வாளருக்கு உத்தரவிட்டார்.
அதனைத் தொடர்ந்து கரூர் தான்தோன்றி மலை காவல் நிலையத்தில் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது அவதூறாகப் பேசுதல், இழிவுபடுத்தும் நோக்கத்தில் பேசி சமூக வலைத்தளத்தில் வெளியிடுதல் ஆகிய 2 சட்டப்பிரிவுகள் கீழ், நீதிமன்ற உத்தரவுப்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக, விக்கிரவாண்டி இடைத்தேர்தலின் போது, நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்த, சாட்டை துரைமுருகன் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி குறித்து அவதூறாகப் பேசியதாக, பதியப்பட்ட வழக்கு தொடர்பாக ஜூலை 11ஆம் தேதி குற்றாலத்தில் கைது செய்யப்பட்டு, திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, நீதிபதி சிறை காவலுக்கு அனுப்ப மறுத்து விடுவித்தது குறிப்பிடத்தக்கது.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்