புவனேஸ்வர்: ஒடிசா மாநிலம், கட்டாக் மாவட்டத்தில் உள்ள சலேபூரைச் சேர்ந்த 12 ஆம் வகுப்பு மாணவி புவனேஸ்வரில் உள்ள தனியார் பயிற்சி மையத்தில் சேர்ந்து அங்குள்ள விடுதியில் தங்கியவாறு நீட் தேர்வுக்கு பயிற்சி மேற்கொண்டு வந்தார்.
இந்த நிலையில், நேற்று காலை (வியாழக்கிழமை) மாணவியை அவரது தந்தை பலமுறை செல்போனில் அழைத்தும் அவர் எடுக்கவில்லை. இதனால் பதறிப்போன தந்தை விடுதி வார்டனை தொடர்புகொண்டு மகளை கவனிக்குமாறு கேட்டுள்ளார். அதனை தொடர்ந்து வார்டன் மாணவியின் அறைக்கு சென்ற பார்த்தபோது மாணவி தற்கொலை செய்துகொண்டு சடலமாக கிடந்துள்ளார். இதுகுறித்து மாணவியின் தந்தைக்கும், சந்திரசேகர்பூர் காவல்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்து போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: ஜம்மு காஷ்மீரில் துணிகரம்... கிராம பாதுகாப்புப் படை உறுப்பினர்களை கடத்தி கொன்ற பயங்கரவாதிகள்..!
தொடர்ந்து நடத்திய விசாரணையில், கடந்த சில நாட்களாகவே மாணவி படிப்பில் கடுமையான மன அழுத்தத்தில் இருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து மாணவி அடிக்கடி தனது தாயை தொடர்புகொண்டு பயிற்சி மையத்தில் தான் சந்திக்கும் சவால்களை சொல்லி புலம்பியதாகவும், இயற்பியல் பாட தேர்வுகள் குறித்து கவலையாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.
அதுமட்டுமின்றி மாணவியின் அறையை போலீசார் சோதனையிட்டபோது, 10க்கு 6 என்ற அளவில் சமையலறையை படுக்கையாக மாற்றி அதில் மாணவி தங்கி வந்ததும் தெரிய வந்தது. இரண்டு மாதங்களுக்கு முன்பு இதே பயிற்சி மையத்தில் உயிரிழப்பு சம்பவம் நடந்துள்ள நிலையில் இது இரண்டாவது தற்கொலை சம்பவம் ஆகும்.
தற்போது இரு மாணவிகளின் குடும்பங்களும் பயிற்சி மையத்தின் அலட்சியத்தைக் குற்றம் சாட்டி, விடுதியை சோதனையிட அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளனர். இந்நிலையில், இயற்கைக்கு மாறான மரணம் என்று வழக்கு (73/24) பதிவு செய்துள்ள போலீசார், பிரேத பரிசோதனை முடிந்த பின்னர் மாணவியின் உடலை குடும்பத்தாரிடம் ஒப்படைத்தனர்.
பயிற்சி மையங்களில் மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் போதிய வசதிகளை ஒரே சீரான முறையில் அனைத்து மாநிலங்களிலும் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. ஆனால், நீதிமன்றம் அறிவித்தும் கூட தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்கள் அரங்கேறி வருவது பெற்றோர் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலை எதற்கும் தீர்வல்ல: சொந்தக் காரணங்களாலோ அல்லது மன அழுத்தத்தின் காரணமாகவோ தற்கொலை எண்ணம் தோன்றினால் 104 அல்லது சிநேகா உதவி எண்களை அழையுங்கள். சிநேகா தற்கொலைத் தடுப்பு உதவி எண் - 044-24640050, மாநிலத் தற்கொலைத் தடுப்பு உதவி எண் - 104, இணைய வழித் தொடர்புக்கு - 022-25521111, மின்னஞ்சல் help@snehaindia.org அல்லது நேரில் தொடர்புகொள்ள, சிநேகா பவுண்டேஷன் ட்ரஸ்ட், 11, பூங்கா சாலை (பார்க் வியூ ரோடு), ஆர்.ஏ.புரம், சென்னை - 600028.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்