டெல்லி :முன்னாள் பிரதமர் சவுத்ரி சரண் சிங்கிற்கு பாரத் ரத்னா விருது அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில், இதனால் அவரது பேரனும் ராஷ்ட்ரிய லோக் தள் கட்சியின் தலைவருமான ஜெயந்த் சவுத்ரி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய உள்ளதாக தகவல் கூறப்படுகிறது.
இந்நிலையில் தனது தாத்தா முன்னாள் பிரதமர் சவுத்ரி சரன் சிங்கிற்கு பாரத் ரத்னா அறிவித்தது குறித்து பிரதமர் மோடிக்கு, ராஷ்ட்ரிய லோக் தள் கட்சியின் தலைவர் ஜெயந்த் சவுத்ரி நன்றி தெரிவித்து உள்ளார். மேலும், முந்தைய அரசுகள் இதுவரை செய்ய முடியாததை பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வையின் மூலம் செயல்படுத்தப்பட்டு உள்ளதாக ஜெயந்த் சவுத்ரி தெரிவித்து உள்ளார்.
அதேநேரம், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய உள்ளது குறித்து எழுந்த கேள்விக்கு தான் அதை எப்படி மறுக்க முடியும் என்று கூறி பாஜகவுடனான கூட்டணியை ஜெயந்த் சவுத்ரி ஏறத்தாழ உறுதி செய்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதன் மூலம் இந்தியா கூட்டணியில் இருந்து ராஷ்ட்ரிய லோக் தள் கட்சி வெளியேறுவதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய ராஷ்ட்ரிய லோக் தள் கட்சிக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், 5 மக்களவை தொகுதிகளும், அமைச்சரவையில் இரண்டு அமைச்சர்களுக்கு பொறுப்பும் வழங்குவதாக பாஜக தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இருப்பினும், இந்த கூட்டணி பேச்சுவார்த்தைக்கு முற்றுப்புள்ளி வைத்த ராஷ்ட்ரிய லோக் தள், இந்தியா கூட்டணியில் இணைந்தது. மேலும் இந்தியா கூட்டணியில் ராஷ்ட்ரிய லோக் தளத்தில் 7 இடங்கள் ஒதுக்கப்பட்டு ஒப்பந்தம் போடப்பட்டதாக தகவல் வெளியானது. இந்நிலையில், முன்னாள் பிரதமர் சவுத்ரி சரண் சிங்கிற்கு பாரத் ரத்னா விருது அறிவித்து ராஷ்ட்ரிய லோக் தளத்தை தன் பக்கம் பாஜக இழுத்துக் கொண்டதாக தகவல் கூறப்படுகிறது.
உத்தர பிரதேசத்தை அடித்தளமாக கொண்டு இயங்கி வரும் ராஷ்ட்ரிய லோக் தள் கட்சிக்கும் ஜாட் சமூக மக்கள் மற்றும் விவசாயிகள் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த கட்சியின் மூலம் விவசாயகளின் வாக்குகளை கைப்பற்ற பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி திட்டமிட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க :மக்களவை தேர்தலில் வாக்களிக்க 96.88 கோடி பேர் தகுதி - இந்திய தேர்தல் ஆணையம்!