பெங்களூரு: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் மேலாளர் சுவாமிநாதன் ஷங்கா, கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ஹெச்எஸ்ஆர் லேஅவுட் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்து உள்ளார். அந்தப் புகாரில், “கடந்த ஆண்டு அக்டோபரில் எனக்கு ஒரு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கால் செய்தார்.
அப்போது, அவர் தன்னை நகுல் என்றும், தான் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் நெருங்கிய உதவியாளர் எனவும் அறிமுகப்படுத்திக் கொண்டார். அது மட்டுமல்லாமல், நீதிபதியின் மகன் சந்தீப் என்பவர் தோனியைச் சந்திக்க விரும்புவதாக தெரிவித்தார்.
இதன்படி, கடந்த ஆண்டு அக்டோபர் 29 அன்று சந்தீப் மற்றும் சல்மான் ஆகிய இருவரும் ஐடிசி பெங்கால் ஹோட்டலில் வைத்து தோனியையும், என்னையும் சந்தித்தனர். இந்த சந்திப்பின்போது, எப்போது வேண்டுமானாலும் திருப்பதி சிறப்பு தரிசனத்துக்கு ஏற்பாடு செய்து தருவதாக சந்தீப் கூறினார்.
பின்னர், கடந்த நவம்பர் 30 அன்று நான் துபாயில் இருந்தபோது என்னை அழைத்த சந்தீப், 12 பேருக்கு திருப்பதி சிறப்பு தரிசன பாஸ் இருப்பதாக தெரிவித்தார். இதனையடுத்து, நான் அதனை வேறு யாருக்காவது கொடுக்கச் சொன்னேன். ஆனால், அவர் ஒரு புரோட்டோகால் கடிதம் ஒன்றை கொடுக்கச் சொன்னார்.