திருப்பதி:ஏழுமலையானை தரிசிப்பதற்கான அனுமதி சீட்டு ( darshan ticket) இல்லாத பக்தர்கள் அவர்களின் ஆதார் எண்ணை பதிந்தால் மட்டுமே இனி அவர்களுக்கு லட்டு வழங்கப்படும் என்று திருப்பதி திருமலை தேவஸ்தான நிர்வாகம் (TTD) அதிரடியாக அறிவித்துள்ளது. லட்டு விற்பனையில் இடைத்தரகர்களின் ஆதிக்கத்தை ஒழிப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் TTD விளக்கம் அளித்துள்ளது.
திருப்பதி என்றாலே முதலில் நம் அனைவரின் நினைவுக்கு வருவது திருமலை ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டு தான். பல மணி நேரம் வரிசையில் காத்திருந்து ஏழுமலையானை தரிசித்த பின்னர் லட்டை பிரசாதமாக வாங்கி சுவைப்பதில் பக்தர்களுக்கு எப்போதும் ஆர்வமுண்டு.
அத்துடன், திருப்பதி தரிசனம் முடிந்து ஊர் திரும்பும் பக்தர்கள், தங்களது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு லட்டு பிரசாதத்தை பகிர்ந்தளிப்பதையும் வழக்கமாக கொண்டுள்ளனர். இதன் காரணமாக அவர்கள் அதிக எண்ணிக்கையிலான லட்டுகளை வாங்குவதிலும் ஆர்வமாக உள்ளனர்.
பக்தர்களின் இந்த ஆர்வத்தையும், திருப்பதி லட்டுக்கு உள்ள தேவையையும் பயன்படுத்தி சில இடைத்தரகர்கள், லட்டுவை அதிக விலைக்கு விற்று வருகின்றனர். இதனால் பக்தர்கள் பலர் ஏமாற்றப்பட்டும் வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு லட்டு விநியோகத்தில் சில அதிரடி மாற்றத்தை திருப்பதி திருமலை தேவஸ்தான நிர்வாகம் கொண்டு வந்துள்ளது.
அதன்படி, "ஏழுமலையானை தரிசிப்பதற்கான அனுமதி சீட்டு இல்லாத (இலவச மற்றும் கட்டண தரிசன டிக்கெட் இல்லாத) பக்தர்கள் மட்டும், லட்டை பெற இனி அவர்களின் ஆதார் எண்ணை பதிய வேண்டியது அவசியம். இவர்களுக்கு இரண்டு லட்டுகள் மட்டும் வழங்கப்படும். தேவைப்பட்டால் 24 மணி நேரத்துக்கு பிறகு மீண்டும் அவர்கள் கூடுதலாக இரண்டு லட்டுகளை பெறலாம்.
தரிசன டிக்கெட் வைத்துள்ள பக்தர்களுக்கு இந்த கட்டுப்பாடு பொருந்தாது. அதாவது அவர்கள் லட்டு வாங்க, ஆதார் எண்ணை பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை" என்று திருமலை திருப்பதி தேவஸ்சானத்தின் கூடுதல் செயல் அலுவலர் வெங்கையா சௌத்ரி இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
மேலும், "திருப்பதி லட்டுக்கு பக்தர்கள் மத்தியில் உள்ள தேவையை பயன்படுத்தி சிலர் கள்ளச்சந்தையிஸ் லட்டு விற்பதாக தெரிய வந்துள்ளது. இதனை கட்டுப்படுத்தும் நோக்கில்தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பக்தர்களுக்கு லட்டு விற்பனை செய்யும் முறையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அதேபோன்று பக்தர்களுக்கு போதுமான அளவு லட்டு தயார் செய்யப்படுகிறது" என்றும் அவர் கூறியுள்ளார்.
பக்தர்கள் லட்டு விநியோகத்தில் இப்புதிய கட்டுப்பாடு உடனடியாக அமலுக்கு வருவதாகவும் திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க:50 ஆண்டுகள் கழித்து அடித்த லாட்டரி.. 67 வயதில் கோடீஸ்வரரான பஞ்சாப் உழைப்பாளி.. சுவாரஸ்ய பின்னணி