டெல்லி :தலைநகர் டெல்லியில் கடந்த 2021ஆம் ஆண்டு வகுக்கப்பட்ட மதுபான கொள்கை முடிவுகளில் தனியாருக்கு லாபம் ஏற்படும் வகையில் அரசு செயல்பட்டதாகவும் இதனால் அரசுக்கு கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது. இது தொடர்பாக டெல்லி துணை நிலை ஆளுநர் விகே சக்சேனா அளித்த புகாரில் சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
மேலும், இந்த விவகாரத்தில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்து இருப்பதாக அமலாக்கத்துறையும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இதில் டெல்லி அமைச்சர்கள் சத்தியேந்திர ஜெயின், மணீஷ் சிசோடியா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. அதைத் தொடர்ந்து, 5 முறை அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகாமல் புறக்கணித்து வந்தார்.
கடைசியாக பிப்ரவரி 5ஆம் தேதி மதுபான ஊழல் வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருந்தது. இருப்பினும் அவர் ஆஜராகாமல் புறக்கணித்தார். இதற்கு முன் கடந்த ஜனவரி 18ஆம் தேதி மற்றும் அதற்கு முன்னர் கடந்த ஆண்டு ஜனவரி 3, நவம்பர் 2 மற்றும் டிசம்பர் 21ஆம் தேதி ஆகிய தேதிகளிலும் அமலாக்கத்துறை அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பி இருந்தது.