டெல்லி: தலைநகர் டெல்லியில் இன்று அதிகாலை இடி, மின்னலுடன் பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், அதிக மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் எச்சரித்துள்ளதால் டெல்லி தலைமைச் செயலகத்தில் இன்று மாநில அரசு அவசரக் கூட்டத்தைக் கூட்டுகிறது. இதில், அரசின் அனைத்து அமைச்சர்களும், சம்பந்தப்பட்ட துறைகளைச் சேர்ந்த அதிகாரிகளும் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
டெல்லியில் வெள்ளிக்கிழமை பெய்த கனமழையால் அதிகபட்சமாக 235.5 மி.மீ மழை பதிவாகியுள்ளது. மேலும், 1936ஆம் ஆண்டுக்குப் பிறகு டெல்லியில் பதிவான அதிகபட்ச மழை அளவு இதுதான் என்று வானிலை ஆய்வு மையத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக, இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் மேற்கூரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. வாகனங்கள் மீது மேற்கூரை விழுந்ததில் 6 பேர் காயமடைந்தனர். இச்சம்பவத்தைத் தொடர்ந்து, டெர்மினல்-1ல் இருந்து விமானம் புறப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது. அதேபோல, சஃப்தர்ஜங் வானிலை நிலையப் பகுதியில் 153.7 மிமீ மழை பதிவாகியுள்ளது.
இதைத் தொடர்ந்து, ஒய்-பாயிண்ட் சலீம்கர் மற்றும் நிகம்போத் காட் அருகே சாலைகள் நீரில் மூழ்கியுள்ளதால், சாந்திவனிலிருந்து ஐஎஸ்பிடி நோக்கிச் செல்லும் இரு பாதைகளிலும், வெளிவட்டச் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, ''அதற்கேற்ப பயணத்தைத் திட்டமிடுங்கள்" என்று டெல்லி போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும், கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக ''யஷோபூமி துவாரகா செக்டார் - 25 மெட்ரோ நிலையத்தில் நுழைவு மற்றும் வெளியேறும் பகுதிகள் மூடப்பட்டுள்ளதாக டெல்லி மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதேபோல, டெல்லி ஏரோசிட்டி மெட்ரோ நிலையத்திலிருந்து இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் டெர்மினல் 1 வரையிலான மெட்ரோ சேவை நிறுத்தப்பட்டுள்ளதாக டெல்லி மெட்ரோ அறிவித்துள்ளது.
இதற்கு மத்தியில், டெல்லி பாஜக கவுன்சிலர் ரவீந்தர் சிங் நேகி, டெல்லி அரசுக்கு எதிராக தனது எதிர்ப்பை காட்டும் வகையில் வினோத் நகர் பகுதியில் தேங்கியுள்ள நீரில் படகு சவாரி மேற்கொண்டார். அவர் பேசுகையில், ''அனைத்து பொதுப்பணித்துறை வடிகால்களும் நிரம்பி வழிகின்றன. பருவமழைக்கு முன் அதை சுத்தம் செய்யவில்லை. இதனால் தண்ணீர் தேங்கியுள்ளது'' என குற்றம் சாட்டினார்.
இதையும் படிங்க: டெல்லி விமான நிலைய மேற்கூரை சரிந்த விபத்தில் ஒருவர் பலி; 5 பேர் கடுகாயம்!