டெல்லி:டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடக்கிறது. அந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் முதலமைச்சராக இருந்தார். இவர் டெல்லி புதிய மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அதன் பிறகு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இருப்பினும் டெல்லி முதலமைச்சர் அலுவலகம் செல்லத் தடை விதிக்கப்பட்டது.
இதையடுத்து அரவிந்த் கெஜ்ரிவால் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, புதிய முதல்வராக அதிஷி தேர்வு செய்யப்பட்டு பதவியேற்றார். அதிஷி பொறுப்பேற்றதையடுத்து, அவர் அரசு பங்களாவில் குடியேறினார். இந்த நிலையில், டெல்லி முதல்வர் அதிஷியின் அதிகாரப்பூர்வ இல்லத்துக்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் இன்று, சீல்வைத்ததாகவும், அவரது வீட்டில் இருந்த உடைமைகள் அகற்றப்பட்டதாகவும் முதல்வர் அலுவலகம் குற்றஞ்சாட்டியுள்ளது.