டெல்லி:டெல்லியின் 8-வது முதலமைச்சராக ஆம் ஆத்மி கட்சி மூத்த தலைவர் அதிஷி இன்று பதவியேற்றுக் கொண்டார். அவர் தனது தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் அமர்ந்திருந்த நாற்காலியில் அமர்வதை தவிர்த்து, அருகில் வைக்கப்பட்ட வெள்ளை நிற நாற்காலியில் அமர்ந்து பணிகளை தொடங்கினார்.
கடந்த சனிக்கிழமை டெல்லி முதல்வராக பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்ட அதிஷி, தலைமைச் செயலகத்தில் உள்ள முதலமைச்சர் அலுவலகத்தில் இன்று பொறுப்பேற்று பணிகளை துவங்கினார். டெல்லி சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 26, 27ம் தேதிகளில் நடைபெற உள்ளது.
முதல்வராக பொறுப்பேற்றதும், எக்ஸ் தளத்தில் அதிஷி ஒரு பதிவை வெளியிட்டார். அதில் அவர், "இன்று டெல்லி முதல்வர் பொறுப்பை ஏற்றுள்ளேன். ராமபிரான் 14 ஆண்டுகள் வனவாசம் சென்றபோது, அயோத்தியின் ஆட்சியை பரதன் கவனிக்க நேர்ந்தபோது அவர் அடைந்த அதே வலி இன்று என் இதயத்தில் இருக்கிறது.
அயோத்தியை பரதன் 14 ஆண்டுகள் ஸ்ரீராமரின் காலணிகளை வைத்து ஆட்சி செய்தது போல், டெல்லியில் 4 மாதங்கள் ஆட்சி நடத்துவேன்." என குறிப்பிட்டுள்ளார். மேலும் அந்தப் பதிவில், கெஜ்ரிவால் பயன்படுத்திய நாற்காலியின் அருகில் வேறு நாற்காலியில் அமர்ந்திருக்கும் புகைப்படத்தையும் முதல்வர் அதிஷி பகிர்ந்துள்ளார்.