திருவனந்தபுரம்:கேரளாவை உலுக்கிய ஷாரோன் ராஜ் கொலை வழக்கு ' அரிதிலும் அரிது ' என கூறியுள்ள நீதிமன்றம், குற்றவாளி கிரீஷ்மாவுக்கு மரண தண்டனை விதித்து பரபரப்பான தீர்ப்பு வழங்கியுள்ளது.
கேரளா கல்லூரி மாணவரான ஷாரோன் ராஜும், கிரீஷ்மாவும் பல ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இந்த நிலையில், கடந்த 2022 ஆம் ஆண்டு கிரீஷ்மா பெற்றோர் அவருக்கு வேறொரு வரன் பார்த்துள்ளனர். அதற்கு கிரீஷ்மாவும் ஒப்புக்கொண்டுள்ளார். இதனால் ஷாரோன் ராஜை கழட்டிவிட திட்டம் தீட்டிய கிரீஷ்மா தனது குடும்பத்தார் உதவியோடு ஷாரோன் ராஜை கொலை செய்துவிட முடிவெடுத்துள்ளார்.
ஷாரோன் ராஜ் மரணம்
அதன்படி, அதே ஆண்டு ஷாரோன் ராஜுக்கு ஜூஸில் அதிக அளவு பாராசிட்டமால் மாத்திரைகளை கலந்து குடிக்க கொடுத்துள்ளார். அதை குடித்த இளைஞருக்கு லேசான உடல்நல கோளாறு ஏற்பட்டு பின்னர் சிகிச்சைக்கு பிறகு மீண்டு வந்துள்ளார். தொடர்ந்து கிரீஷ்மா கசாயத்தில் கொடிய பூச்சிக்கொல்லி மருந்தை கலந்து ஷாரோனை குடிக்க செய்துள்ளார். இந்த முறை கடுமையான பாதிப்புக்குள்ளான ஷாரோன் ராஜ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து 11 நாட்கள் சிகிச்சையில் இருந்த அவர் உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.
கொலை அம்பலம்
இதற்கிடையே ஷாரோன் ராஜ் குடும்பத்தார் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். ஷாரோன் ராஜ் மரணிப்பதற்கு முன்பு மாஜிஸ்திரேட்டிடம் கொடுத்த வாக்குமூலத்தில்கூட கிரீஷ்மாவுக்கு எதிராக எந்த குற்றச்சாட்டுகளையும் தெரிவிக்கவில்லை. ஆனால், அறிவியல் பூர்வ ஆதாரங்கள் ஷாரோன் ராஜ் கொலைக்கு முக்கிய ஆதாரங்களாக இருந்தன. மேலும், விசாரணை வட்டத்துக்குள் கிரீஷ்மா, அவரது தாய் சிந்து, மாமா நிர்மல் குமார் ஆகிய மூவரும் கொண்டு வரப்பட்டனர். அப்போது, கிரீஷ்மாதான் ஷாரோன் ராஜுக்கு விஷம் வைத்து கொன்றதாக ஒப்புக்கொண்டார்.
இந்த வழக்கில் கைதான கிரீஷ்மா கடந்த ஓராண்டு சிறையில் இருந்து பின்னர் ஜாமீனில் வெளிவந்தார். மேலும், போலீஸ் காவலில் இருந்தபோது அவர் தற்கொலைக்கும் முயன்றார். இதனிடையே இந்த வழக்கு விசாரணை நெய்யாற்றின்கரை செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. ஜனவரி 25, 2023 அன்று போலீசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். மொத்தம் 95 சாட்சிகள் விசாரணையுடன் இந்த வழக்கு கடந்த ஜன.3 ஆம் தேதி முடிவடைந்தது.
மரண தண்டனை
இந்நிலையில், இந்த வழக்கில் கடந்த ஜன.17 ஆம் தேதி தீர்ப்பு வழங்கிய செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி ஏ.எம்.பஷீர், கொலை (பிரிவு 302) உட்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் கிரீஷ்மாவை குற்றவாளி என அறிவித்தார். அதே சமயம் அவரது மாமாவுக்கும் தடயங்களை அழித்ததாக குற்றவாளி என தீர்ப்பளித்தார். மேலும், இந்த வழக்கில் இரண்டாவது எதிரியாக சேர்க்கப்பட்டிருந்த கிரீஷ்மாவின் தாயார் சிந்து போதிய ஆதாரம் இல்லாததால் விடுதலை செய்யப்பட்டார்.
இந்நிலையில், இன்று (ஜன.20) இந்த வழக்கில் தண்டனை விவரங்களை அறிவித்த நீதிமன்றம், ''இந்த வழக்கு அரிதிலும் அரிதானது. கொலை குற்றம் நடந்தபோது கிரீஷ்மாவின் வயது 22. இந்த வழக்கின் தீர்ப்பில் குற்றவாளியின் வயதைக் கருத்தில் கொள்ளக் கூடாது. எனவே, கொலை வழக்கில் குற்றவாளி கிரீஷ்மாவுக்கு மரண தண்டனையுடன், கடத்தல் பிரிவுகளின் கீழ் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், விசாரணைக் குழுவை தவறாக வழிநடத்தியதற்காக ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும், இரண்டு லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது என தீர்ப்பளித்தது. மேலும், சாட்சியங்களை அழித்ததற்காக கிரீஷ்மாவின் மாமா நிர்மல் குமாருக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.