டெல்லி:அருணாசல பிரதேசம் மற்றும் சிக்கிம் மாநிலங்களுக்கான வாக்கு எண்ணிக்கை தேதியை மாற்றி இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. முன்னர் ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது ஜூன் 2ஆம் தேதியாக மாற்றி இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.
மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கையுடன் சேர்த்து அருணாசலப் பிரதேசம் மற்றும் சிக்கிம் மாநிலத்தில் ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது. இந்நிலையில், ஜூன் 2ஆம் தேதியே இரண்டு மாநில சட்டப்பேரவைகளுக்கான பதவிக் காலம் காலாவதியாக உள்ள நிலையில், வாக்கு எண்ணிக்கையை முன் கூட்டியே நடத்துவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.
அதேநேரம் அருணாசல பிரதேசம் மற்றும் சிக்கிம் மாநிலங்களில் மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையில் எந்த மாற்றமும் இல்லை என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது. நடப்பாண்டில் மக்களவை தேர்தலுடன் சேர்த்து அருணாசல பிரதேசம், ஆந்திர பிரதேசம், சிக்கிம் மற்றும் ஒடிசா ஆகிய நான்கு மாநில சட்டப்பேரவைகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது.