டெல்லி:18வது மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களில் வெற்றி மீண்டும் ஆட்சியை கைப்பற்றிய நிலையில், பிரதமராக முன்றாவது நரேந்திர மோடி பதவியேற்றுக் கொண்டார். இந்நிலையில், புதிய அரசு ஆட்சி அமைத்த பின் முதல் முறையாக மக்களவை கூட்டத் தொடர் நடைபெறுகிறது.
தேர்தலுக்கு பின் முதலாவது மக்களவை கூட்டத் தொடர் நேற்று (ஜூன் 24) கூடியது. தற்காலிக சபாநாயகர் பர்த்ஹருளி மஹ்தாப் தலைமையில் எம்பிக்கள் பதவியேற்றுக் கொண்டனர். பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், ஜேபி நட்டா, நிதின் கட்காரி, மன்சுக் மாண்டவியா உள்ளிட்டோர் பதவியேற்றுக் கொண்டனர்.
இந்நிலையில், இன்று (ஜூன் 25) இரண்டாவது நாளாக எம்.பிக்கள் பதவியேற்றுக் கொள்கின்றனர். அதைத் தொடர்ந்து நாளை (ஜூன் 26) சபாநாயகர் தேர்தல் நடைபெறுகிறது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் மீண்டும் ஓம் பிர்லா களம் இறங்க உள்ளார். அதை முன்னிட்டு சபாநாயகர் தேர்வுக்கான வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார்.
முன்னதாக காங்கிரஸ் தரப்பில் கேரளாவை சேர்ந்த எட்டு முறை எம்பி பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கொடிக்குன்னில் சுரேஷ், சபாநாயகர் பதவிக்கான வேட்பு மனுவை தாக்கல் செய்தார். தமிழக எம்பி ஆ.ராசா உள்ளிட்டோர் முன்னிலையில் கொடிக்குன்னில் சுரேஷ் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
முன்னதாக சபாநாயகர் தேர்வை ஒருமித்த கருத்துடன் நடத்த பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி விரும்பியது. அதன் காரணமாக பாஜக சார்பில் எதிர்க்கட்சிகளுடன் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சுவார்த்தை நடத்தினார். தேசிய ஜனநாயக கூட்டணியின் சபநாயகர் வேட்பாளரை ஆதரிப்பதாக தெரிவித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, அவை மரபு படி துணை சபாநாயகர் பொறுப்பை எதிர்க்கட்சிகளுக்கு ஒதுக்க வேண்டும் என்று கோரினார்.
இந்நிலையில், பாஜக மற்றும் இந்தியா கூட்டணி சார்பில் சபாநாயகர் பதவிக்கு வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். இதனிடையே துணை சபாநாயகர் பொறுப்பை தங்களுக்கு ஒதுக்கக் கோரி ஆந்திராவின் தெலுங்கு தேசம் மற்றும் பீகாரின் ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கூட்டணி கட்சிகள் கோருவதாக தகவல் கூறப்படுகிறது.
இதையும் படிங்க:"தேசிய ஜனநாயக கூட்டணி சபாநாயகருக்கு ஆதரவு... ஆனால்?" - ராகுல் காந்தி போடும் விடுகதை என்ன? - Lok sabha Speaker Election