டெல்லி:ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து முதன் முதலாக கருத்துத் தெரிவித்துள்ள மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தேர்தல் தோல்வி குறித்து ஆய்வு செய்யப்படும் என்று கூறியுள்ளார்.
ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தலில் 37 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. பாஜக அரசுக்கு எதிர்ப்பு அலை இருந்த சூழலில் காங்கிரஸ் வெற்றி பெறும் என்று கருத்துக் கணிப்புகள் வெளியான நிலையில் இந்த தோல்வி காங்கிரஸ் கட்சிக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.
இந்த நிலையில் ஹரியானா தேர்தல் தோல்வி குருத்து எக்ஸ் தளத்தில் கருத்து பதவிட்டுள்ள ராகுல் காந்தி, "ஹரியானா, ஜம்மு-காஷ்மீர் மாநிலங்களில் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி. ஜம்மு-காஷ்மீரில் இந்தியா கூட்டணி வெற்றி என்பது அரசியலமைப்பு சட்டத்தின் வெற்றியாகும். ஜனநாயகப்பூர்வ சுய மரியாதைக்கு கிடைத்த வெற்றி.
ஹரியானாவில் எதிர்பாரதவிதமாக கிடைத்த தேர்தல் முடிவு குறித்து நாங்கள் ஆய்வு செய்து வருகின்றோம். ஹரியானாவின் பல்வேறு தொகுதிகளில் இருந்து எங்களுக்கு கிடைத்துள்ள புகார்கள் குறித்து தேர்தல் ஆணையத்துக்குத் தெரிவிப்போம். ஹரியானாவில் வெற்றிக்காக உழைத்த காங்கிரஸ் தொண்டர்களுக்கும் நன்றி, உரிமைகளுக்காக, சமூக மற்றும் பொருளாதார நீதிக்காக, உண்மைக்காக தொடர்ந்து போராடுவோம். தொடர்ந்து குரல் எழுப்பிக் கொண்டே இருங்கள்,"என்று கூறியுள்ளார்.
இதனிடையே மாலையில் காங்கிரஸ் கட்சியின் பிரதிநிதிகள் குழு தேர்தல் ஆணையத்திற்கு சென்று புகார் அளித்தது. ஹரியானா முன்னாள் முதலமைச்சர் புபிந்தர் ஹடா, ராஜஸ்தான் முன்னாள் முதலமைச்சர் அஷோக் கெலாட், கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், ஜெய்ராம் ரமேஷ் அகியோர் தேர்தல் ஆணையத்தில் புகாரை வழங்கினர்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஹடா, ஹரியானா தேர்தலில் பயன்படுத்தப்பட்ட சில மின்னணு எந்திரங்கள் தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த வேண்டும் என கூறினார். அனைவரும் காங்கரிஸ்தான் ஆட்சியமைக்கும் என்று நம்பிய நிலையில், தேர்தல் முடிவுகள் அதிர்ச்சியளிப்பதாக அவர் கூறினார். தபால் வாக்குகள் எண்ணும் போது காங்கிரஸ் முன்னிலை வகித்த நிலையில், மின்னணு எந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ண துவங்கும் போது நிலைமை மாறியதாகவும் அவர் குறிப்பிட்டார்.