கோழிகோடு:கேரள மாநிலம் வடகரையில் உள்ள பேங்க் ஆப் மகாராஷ்டிரா வங்கியில் கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த மாத ஜெயக்குமார் (வயது 34) என்பவர் வங்கி மேலாளராக பணியாற்றி வந்துள்ளார். கடந்த மாதம் அவர் எர்ணாகுளத்தில் உள்ள பாலாரிவட்டம் கிளைக்கு பணியிடம் மாற்றம் செய்யப்பட்ட நிலையில், அங்கு அவர் பணியில் சேரவில்லை.
இந்த நிலையில் வடகரை கிளைக்கு புதிய மேலாளராக பொறுப்பேற்ற கேரள மாநிலம் பனூரைச் சேர்ந்த இர்ஷத் வங்கியில் மறுமதிப்பீடு செய்துள்ளார். அப்போது ரூபாய் 17 கோடி மதிப்புள்ள 26 கிலோவுக்கும் அதிகமான எடை உடைய தங்கத்திற்கு பதிலாக போலியான தங்கம் இருந்தது தெரிய வந்துள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த புதிய வங்கி மேலாளர் இர்ஷத், இந்நிகழ்வு தொடர்பாக வடகரை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த வடகரை போலீசார், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த ஜூன் 13ஆம் தேதி முதல் ஜூலை 6ஆம் தேதி வரை வங்கியில் அடகு வைத்த 42 வாடிக்கையாளர்களின் வங்கி கணக்குகளில் இருந்து தங்கம் திருடப்பட்டுள்ளது என்பது தெரிய வந்துள்ளது.