புது டெல்லி:டெல்லி சிறப்புப் பிரிவு போலீசார் மேற்கொண்ட அதிரடி சோதனையில் ரூ.2000 கோடி மதிப்புள்ள 560 கிலோ கோகோயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய போதைப்பொருள் கடத்தல் சம்பவம் முறியடிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய டெல்லி சிறப்புப் பிரிவு கூடுதல் போலீஸ் கமிஷனர் பிரமோத் சிங் குஷ்வாகா, " போதைப் பொருள் கடத்தல் தொடர்பாக தெற்கு டெல்லியில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கோகோயின் போதைப் பொருளை டெல்லி மற்றும் என்சிஆர் பகுதியில் விற்பதற்கு அவர்கள் திட்டமிட்டிருந்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. கைது செய்யப்பட்டுள்ள டெல்லி வசந்த விஹாரை சேர்ந்த துஷார் கோயல் , ஹிமான்சு, அவுரங்கசீப் ஆகியோர் போதை பொருளை பாரத் ஜெயின் என்பவரிடம் ஒப்படைக்க திட்டமிட்டிருந்தனர். மஹிபால்பூர் பகுதியில் உள்ள கிடங்கில் இருந்து வெளியேறி போதைப் பொருளை ஒப்படைக்கச் சென்றபோது அவர்கள் போலீசாரிடம் பிடிப்பட்டனர். துஷார் கோயல், ஹிமான்சு, அவுரங்கசீப் ஆகியோரிடம் இருந்து 15 கிலோ போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
டெல்லி சிறப்பு போலீஸ் பிரிவு 560 கிலோவுக்கு அதிகமான கோகோயினை பறிமுதல் செய்துள்ளது. கைது செய்யப்பட்டுள்ள துஷார் கோயல் 40 வயதானவர். அவரது தந்தை ஒரு பதிப்பகம் நடத்தி வருகிறார். ஹிமான்சு அவருடைய கூட்டாளி ஆவார். இவர்களுக்கு ஓட்டுநராக அவுரங்கசீப் பணியாற்றி வந்தார். டெல்லிக்கு சாலை வழியாக கோகோயின் கடத்தி வரப்பட்டுள்ளது. மரிஜுவானா போதைப்பொருள் விமானம் வழியே கடத்தி வரப்பட்டுள்ளது. இந்த கடத்தல் கட்டமைப்பில் முக்கிய விநியோகிப்பாளராக துஷார் கோயல் திகழ்ந்துள்ளார்.