டேராடூன்: உத்தரகாண்ட் மாநில சட்டசபையின் சிறப்பு கூட்டத்தொடர் நேற்று (பிப்.5) தொடங்கி, 4 நாட்களுக்கு நடைபெறுகிறது. இந்த நிலையில், குடிமக்கள் அனைவரும் ஒரே மாதிரியான சட்டத்தைப் பின்பற்றும் நோக்கிலான பொது சிவில் சட்ட மசோதாவை, அம்மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி இன்று உத்தரகாண்ட் சட்டசபையில் தாக்கல் செய்து உள்ளார்.
முன்னதாக, கடந்த 2022ஆம் ஆண்டு நடைபெற்ற உத்தரகாண்ட் மாநில சட்டசபைத் தேர்தலின்போது, பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவோம் என பாஜக வாக்குறுதி அளித்தது. இந்த நிலையில், முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி தலைமையிலான உத்தரகாண்ட் அரசு, கடந்த மார்ச் 2022-இல் பொது சிவில் சட்டத்தை வடிவமைப்பதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையில் 5 பேர் கொண்ட கமிட்டியை அமைத்து உத்தரவிட்டது.
இந்த கமிட்டி பல்வேறு கட்ட ஆய்வுகள் மற்றும் கருத்துக் கேட்புகளுக்குப் பிறகு, பொது சிவில் சட்டத்திற்கான வரைவை முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமியிடம் ஒப்படைத்தது. இந்த நிலையில், இன்று நடைபெற்று வரும் சட்டசபை சிறப்பு கூட்டத்தொடரில், பொது சிவில் சட்டத்தை புஷ்கர் சிங் தாமி தாக்கல் செய்துள்ளார்.