புதுச்சேரி:புதுச்சேரியில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு அரசு தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. அதன்படி பாலித்தீன் பைகள், பிளாஸ்டிகள் கப், தெர்மாகோல் தட்டுகள், தண்ணீர் பாக்கெட், உள்ளிட்ட பொருட்கள் கடைகளில் விற்பனை செய்யக் கூடாது எனவும் கூறப்பட்டிருந்தது.
இருப்பினும், புதுச்சேரியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை தொடர்ந்து நடைபெற்ற வண்ணம் உள்ளது. இந்நிலையில் புதுச்சேரியில் பொருட்கள் விற்பனையைத் தடுக்க சுற்றுச்சூழல் துறை, உள்ளாட்சி, வருவாய், உணவு பாதுகாப்புத்துறை, தொழிலாளர் துறை அடங்கிய ஒருங்கிணைந்த ஆய்வு கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் நகரப் பகுதிகளில் உள்ள கடைகளில் அரசு சார்பில் அடிக்கடி சோதனை நடத்தப்பட்டு, தடையை மீறி பிளாஸ்டிக் பொருட்களைப் பதுக்கி கடைகளில் விற்பனை செய்யப்படுவதை அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகின்றனர். இதனை படிப்படியாகக் குறைக்கும் நோக்கில் அரசு முன்னேற்பாடுகளைச் செய்து வருகிறது.
அதன் முதற்கட்டமாகப் புதுச்சேரி பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள உழவர் சந்தைக்குக் காய்கறிகள் வாங்க வரும் மக்களைக் கவரும் வகையிலும், ஊக்குவிக்கும் வகையில் புதுச்சேரி அரசு மாசுக்கட்டுப்பாட்டுக் குழுமம் சார்பில் உழவர் சந்தையில் துணிபை வழங்கும் ஏடிஎம்மை நிறுவியுள்ளது.