சென்னை:திமுக மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா மாநிலங்களவை தலைவரான துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், "ஜூன் 18ஆம் தேதி செவ்வாய்க்கிழமை (அதாவது நேற்று) மதியம் 2.20 மணி அளவில் பேட்டரி வாகனம் மூலம் நாடாளுமன்றத்திற்குள் செல்ல முயன்றேன்.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் தன்னை வழிமறித்ததார். தொடர்ந்து நான் என்ன காரணத்திற்காக நாடாளுமன்றத்திற்கு செல்கிறேன் என்பது குறித்து விசாரணை நடத்தினார். அவர் என்னை நடத்திய விதம் விரும்பத்தகாத வகையில் இருந்தது.
தமிழ்நாட்டு மக்களின் பிரதிநிதியாக வந்த என்னிடம் இப்படி அவர் கேள்வி கேட்க வேண்டிய அவசியம் என்ன?. நாடாளுமன்றத்தில் முன்பு இது போன்று எந்த பாதுகாவலரும் எம்.பிக்களை இப்படி நடத்தியது இல்லை. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று எம்.எம் அப்துல்லா அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும் அலுவல் பூர்வ பணிகள் இல்லாத போதும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்றத்திற்குள் நுழைய அனுமதி உண்டு என்பதை தான் நம்புவதகாவும், எம்.பிக்கள் அவையின் தலைவருக்கு மட்டுமே பதில் கூற வேண்டிய நிலையில், மற்றவர்கள் யாருக்கும் பதிலளிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
கடந்த மே மாதம் நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட பாதுகாப்பு குளறுபடிகள் காரணமாக அங்கு பாதுகாப்பு பணியில் நிலைநிறுத்தப்பட்டு இருந்த டெல்லி போலீசார் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக சிஐஎஸ்எப் வீரர்கள் நிலை நிறுத்தப்பட்டனர். பாதுகாப்பு பணியில் சிஐஎஸ்எப் வீரர்கள் நிலைநிறுத்தப்பட்டது முதலே எம்.பிக்களுக்கும் அவர்களுக்கும் இடையே அடிக்கடி இது போன்று பிரச்சினை நிகழ்வதாக கூறப்படுகிறது.
நாடாளுமன்ற பாதுகாப்பு கருதியே சிஐஎஸ்எப் வீரர்கள் இதுபோன்று நடந்து கொள்வதாக கூறப்பட்டாலும் உறுப்பினர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் எம்.எம். அப்துல்லாவுக்கு ஏற்பட்ட கசப்பான நிகழ்வுக்கு பல்வேறு கட்சியினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். எம்.எம் அப்துல்லாவின் கடிதத்தை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி சகேத் கோக்லே சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிப்பதாக பதிவிட்டுள்ளார்.
மேலும் இது நம்ப முடியாத அதிர்ச்சியாகவும், வெட்கப்பட வேண்டிய விஷயமாகவும் உள்ளதாகவும், நாடாளுமன்றத்திற்கு எதற்காக செல்கிறீர்கள் என எம்பிகளை கேள்வி கேட்க முடியாது, அவையின் உறுப்பினர் என்ற நிலையில், நாடாளுமன்றத்திற்கு செல்ல அனைத்து உறுப்பினர்களுக்கும் உரிமையுள்ளதாக அவர் பதிவிட்டுள்ளார்.
இதற்காகவா நாடாளுமன்ற பாதுகாப்பு சேவைகளை சிஐஎஸ்எப்-க்கு மாற்றப்பட்டது? இந்திய எம்.பி.க்கள் தங்கள் பணிகளைச் செய்யவிடாமல் தடுப்பதா? என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க:அமேசான் அன்பாக்சில் சர்ப்பரைஸ்: நாகப் பாம்பு கடியில் இருந்து நூலிழையில் தப்பிய தம்பதி! வைரல் வீடியோ! - Amazon cobra unbox video