புதுச்சேரி: நம் முன்னோர்களின் சிந்தனைகள், எண்ணங்கள், பழக்க வழக்கங்கள், வாழ்க்கை முறை மற்றும் நம்பிக்கை உள்ளிட்ட அனைத்தையும் நாட்டுப்புறக் கலைகள் மூலம் அறிய முடிகிறது. இக்கலைகளே நம் சமுதாயத்தின் ஆவணமாகத் திகழ்கின்றன. அதில் ஒன்றுதான் தெருக்கூத்து. சினிமாவுக்கு நிகராக இருந்து வந்த இந்த தெருக்கூத்து கலை, கோயில் திருவிழாக்கள் மற்றும் முக்கிய ஊர் திருவிழாவின்போது விடிய விடிய மக்களைக் கொண்டாட்டத்தில் ஆழ்த்தும் கலையாகும்.
ஆனால், தற்போது இந்த தெருக்கூத்து, காலத்தின் மாற்றத்தினால் நிலைத்து நிற்க முடியாமல் அழிந்து வரும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில், இவ்வாறு அழிந்து வரும் தெருக்கூத்து கலையை மக்களிடம் தொடர்ந்து உயிரூட்டும் விதமாக யாழ் அரங்கம் மற்றும் ஆய்வு நிறுவனம் ஒருங்கிணைந்து நடத்தும், 10 நாட்கள் தெருக்கூத்து பயிற்சி பட்டறை புதுச்சேரியில் நடைபெற்றது.
இந்நிலையில், இப்பயிற்சி பட்டறையின் இறுதி நாளான நேற்று (பிப்.5), வீரவாள் அபிமன்யு என்ற தலைப்பில் முருங்கம்பாக்கம் கைவினை கிராமத்தில் தெருக்கூத்து நடைபெற்றது. இந்த நிகழ்வில் புதுச்சேரி, காரைக்கால் மற்றும் தமிழகப் பகுதிகளான தஞ்சாவூர், சென்னை உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் பட்டதாரி இளைஞர்கள், இளம்பெண்கள் உள்ளிட்டோர் ஆர்வத்துடன் பங்கேற்று, தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.
அந்த வகையில், இந்த தெருக்கூத்தை புதுச்சேரியில் உள்ள தெருக்கூத்து பயிற்சி பட்டறையில் பட்டதாரி இளைஞர்கள் ஆர்வத்துடன் கற்று வருகின்றனர். அதில் முக்கியமான ஒருவர்தான் மருத்துவத் துறையைச் சார்ந்த இளைஞர் டாக்டர் விக்னேஷ். இவர் சென்னை தனியார் மருத்துவமனையில் மருத்துவராகப் பணியாற்றி வருகிறார். மருத்துவப் பணியை பார்த்துக்கொண்டு வரும் இவர், தற்போது புதுச்சேரியில் இந்த பயிற்சி பட்டறையில் பங்கேற்றுள்ளது, தெருக்கூத்து பயிற்சி பெற்று வரும் மாணவர்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.