புதுடெல்லி: தலைமை தேர்தல் ஆணையர் தேர்வு செய்யப்பட்டது குறித்து அதிருப்தி தெரிவித்து எக்ஸ் தளத்தில் அறிக்கை வெளியிட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தலைமை தேர்தல் ஆணையரை தேர்வு செய்வது குறித்த வழக்கில் உச்ச நீதிமன்றம் முடிவு எடுக்கும் வரை மத்திய அரசு காத்திருக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் வலியுறுத்தி உள்ளார்.
தலைமை தேர்தல் ஆணையரை தேர்வு செய்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி ஆகியோரைக் கொண்ட குழுவின் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமது அதிருப்தியை தெரிவிக்கும் வகையில் அறிக்கை ஒன்றை ராகுல் காந்தி சமர்பித்துள்ளார்.
இது குறித்து தமது எக்ஸ் தளத்தில் கருத்துத் தெரிவித்துள்ள ராகுல் காந்தி, அடுத்த தலைமை தேர்தல் ஆணையரை தேர்வு செய்வதற்கான கூட்டத்தில், பிரதமர், மத்திய உள்துறை அமைச்சர் ஆகியோரிடம் என்னுடைய அதிருப்தி தொடர்பான குறிப்பை சமர்பித்தேன்," என்று தெரிவித்துள்ளார். மேலும் அதிருப்தி குறிப்பு கொண்ட இரண்டு பக்க அறிக்கையை எக்ஸ் தளத்திலும் பதிவு செய்துள்ளார்.
இதையும் படிங்க:நள்ளிரவில் தலைமை தேர்தல் ஆணையர் நியமனம் - அரசியலமைப்புக்கு எதிரானது என கே.சி. வேணுகோபால் விமர்சனம்!
ராகுல் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தலைமை தேர்தல் ஆணையர், தேர்தல் ஆணையர் ஆகியோரை தேர்வு செய்யும் நடைமுறையில் நிர்வாக தலையீடு இல்லாமல் சுதந்திரமாக தேர்தல் ஆணையம் திகழ வேண்டும் என்பதே மிகவும் அடிப்படையான அம்சமாகும். உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மீறும் வகையில் தேர்வு குழுவில் இருந்து இந்திய தலைமை நீதிபதியை நீக்கியதன் மூலம் தேர்தல் நடைமுறையின் நேர்மை குறித்த லட்சக்கணக்கான வாக்காளர்களின் கவலைகளை மோடி அரசு மேலும் அதிகப்படுத்தியிருக்கிறது.
எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில், நம் தேசத்தை நிர்மாணித்த தலைவர்கள், பாபா சாகேப் அம்பேத்கர் ஆகியோரின் கொள்கைகளை, நிலைநிறுத்த வேண்டியதும், அரசை பொறுப்புடமையாக்குவதும் எனது கடமை. தேர்வு குழுவின் உறுப்பினர்கள் தேர்வு குறித்த செயல்பாடுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ள நிலையில், அந்த வழக்கு 48 மணி நேரத்துக்குள் விசாரணைக்கு வர உள்ள நிலையில் பிரதமர், உள்துறை அமைச்சர் ஆகியோர் புதிய தலைமை தேர்தல் ஆணையரை நள்ளிரவில் தேர்வு செய்வது என்ற முடிவு அவர்கள் இருவரின் மோசமான முன்னுதாரணம் மட்டுமின்றி மரியாதை குறைவும் கூட,"என்று குறிப்பிட்டுள்ளார்.