டெல்லி:சி.பி.எஸ்.இ அங்கீகாரம் வேண்டி பள்ளிகள் தகுதியான ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டும். அப்படி இரண்டு டெல்லி பள்ளிகள் சமர்ப்பித்த சான்றிதழ்கள் போலியானவை எனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சி.பி.எஸ்.இ (CBSE) செயலளார் ஹிமான்ஷு குப்தா (HIMANSHU GUPTA) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் சில முக்கியமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார். அதில், நிதி உதவி வழங்குவதற்காகவும், மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்துவதற்காகவும் பல்வேறு கட்ட விசாரணை மற்றும் ஆவண சரிபார்ப்புக்கு பிறகு பள்ளிகளை சிபிஎஸ்இ அங்கீகரிக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சி.பி.எஸ்.இ அங்கீகாரம்
மேலும், சி.பி.எஸ்.இ பள்ளிகளுக்கான வாரிய இணைப்பு சட்டம் 2018 படி பார்க்கும்போது, சில கட்டாய மற்றும் நிபந்தனைக்குட்பட்ட சட்டத் திட்டங்களை பள்ளிகள் நிறைவேற்றிய பின்னரே, அவை சி.பி.எஸ்.இ பள்ளியாக அங்கீகரிக்கப்படுகிறது.
இவ்வாறு தங்களது பள்ளிகளை சி.பி.எஸ்.இ பள்ளிகளாக மாற்ற விரும்பும் பள்ளி தலைமை அலுவலர்கள், விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் போது அத்தியாவசிய ஆவணங்கள் அனைத்தையும் தர வேண்டி உள்ளது. இந்த ஆவணங்களை சி.பி.எஸ்.இ வாரியம் மிகவும் கண்டிப்பான ஆய்வுக்கு உட்படுத்துகிறது என செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
போலி சான்றிதழ்
அந்த வகையில், பள்ளி தரப்பில் இருந்து வழங்கப்படும் ஆவணங்களின் உண்மை தன்மையை உறுதிப்படுத்துவதற்காக ஆவணங்களை பல கட்ட பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படுகிறது. இந்நிலையில், சமீபத்தில் டெல்லியில் உள்ள 'மணவா பவ்னா பப்ளிக் பள்ளி', உத்தம் நகர் பகுதியில் உள்ள 'சத் சாஹேப் பப்ளிக் பள்ளி', ஆகிய இரண்டு பள்ளிகளின் நில சான்றிதழ்களை ஆய்வு செய்து, அடுத்த கட்ட சரிபார்ப்பிற்காக, அவற்றை வழங்கும் உயர் அலுவலர்களுக்கு இந்த ஆவணங்கள் அனுப்பப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:சி.பி.எஸ்.இ 10 மற்றும் 12-ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு தேதி அறிவிப்பு!
ஆனால், குறிப்பிட்ட அந்த நில சான்றிதழ்களை வழங்கும் அலுவலர்கள், இது போன்ற சான்றிதழ்களே வழங்கப்படவில்லை என்றும், பள்ளிகள் போலி நில சான்றிதழ்களை சமர்ப்பித்திருப்பதாகவும் கண்டறிந்துள்ளனர்.
அதன்படி, மோசடி செயலில் ஈடுபட்ட பள்ளிகளுக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாரியம் ப்ரீத் விஹார், காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக சி.பி.எஸ்.இ செயலாளர் தெரிவித்துள்ளார்.
நவம்பர் மாதம், தகுதியின்றி செயல்பட்ட 21 சி.பி.எஸ்.இ பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டது. இதற்கு, கல்வியின் தரத்தை சமரசமின்றி வழங்குவதற்காக இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் கூறியிருந்தது.