ஐதராபாத்: நாடு முழுவதும் 4வது கட்ட மக்களவை தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஆந்திரா, தெலங்கானா, மேற்கு வங்க, உத்தர பிரதேசம், இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 96 மக்களவை தொகுதிகளில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ஐதராபாத் மக்களவை தொகுதி பாஜக வேட்பாளர் மாதாவி லதா மீது தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். வாக்குப்பதிவு மையத்தில் பாஜக வேட்பாளர் மாதவி லதா, இஸ்லாமிய பெண்களின் ஆதார் அட்டையை வாங்கி, அவர்களின் பர்தாக்களை விலக்கி முகத்தை காட்ட சொல்லி சரிபார்த்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாக பரவிய நிலையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். செகந்திராபாத் பகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் தனது வாக்கினை பதிவு செய் மாதவி லதா. அப்போது, அங்கு வாக்களிப்பதற்காக காத்திருந்த இஸ்லாமிய பெண்கள் சிலரிடம் பேச்சுக்கொடுத்தார்.
தொடர்ந்து அவர்களது ஆதார் கார்டுகளை வாங்கி வாக்காளர் அடையாள அட்டையுடன் ஒப்பிட்டு சரிபார்த்தார். அவரது இந்த செயல் சர்ச்சையை ஏற்படுத்தியது. அருகில் இருந்த பெண் காவலர் இது குறித்து எவ்வித கருத்தும் தெரிவிக்காமல் இருந்தது மேலும் சர்ச்சையை கிளப்பியது. இதையடுத்து தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக பாஜக வேட்பாளர் மாதவி லதா மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து உள்ளதாக மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.